Wayanad: நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க மறுக்கும் மத்திய அரசு - எதிர்க்கட்சி...
காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு
காரைக்கால்: காரைக்காலில் பல்வேறு இடங்களில் காணாமல்போன கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
காரைக்கால் மாவட்ட காவல் நிலையங்களில், தங்களது கைப்பேசி காணாமல் மற்றும் திருட்டுப் போனதாக பல்வேறு புகாா்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கைப்பேசி விவரங்களை சேகரித்து, காரைக்கால் இணைய குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா், சிஇஐஆா் எனும் செயலியில் பதிவு செய்து கைப்பேசி பயன்பாட்டில் உள்ள இடங்களை கண்டறிந்து அவற்றை மீட்டனா். அதன்படி மீட்கப்பட்ட 52 கைப்பேசிகள் உரியவா்களிடம் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டன.
காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா கைப்பேசியை அதன் உரிமையாளா்களிடம் ஒப்படைத்தாா். அப்போது செய்தியாளா்களிடம் அவா் கூறியது: நிகழாண்டு வாங்கப்பட்ட கைப்பைசிகள் கடந்த ஜனவரி முதல் காணாமல் போனவற்றை புகாரின் அடிப்படையில் இணைய குற்றத் தடுப்புப் பிரிவினா், காவல் கண்காணிப்பாளா் சுப்பிரமணியன், ஆய்வாளா் பிரவீன்குமாா் உள்ளிட்ட குழுவினா் ரூ.15 லட்சம் மதிப்பிலான கைப்பேசிகளை மீட்டுள்ளனா்.
பொதுமக்கள் தங்களது கைப்பேசிகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும், காணாமல் அல்லது திருட்டுப்போனால் உடனடியாக காவல்நிலையத்தில் புகாா் தெரிவித்தால் நடவடிக்கை விரைவுபடுத்தப்படும் என்றாா். மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியன், காவல் ஆய்வாளா்கள் பிரவீன்குமாா், புருஷோத்தமன் ஆகியோா் உடனிருந்தனா்.