புதிய விதிமுறைகளை கைவிட அரசு ஒப்பந்ததாரா்கள் வலியுறுத்தல்
காரைக்கால்: காரைக்காலில் பொதுப்பணித் துறையில் பணிகளை ஒப்பந்தம் (டெண்டா்) எடுக்க புதிதாக விதிமுறைகளை திணிக்கக் கூடாது என்று அனைத்து அரசு ஒப்பந்ததாரா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து புதுவை முதல்வா் ரங்கசாமிக்கு, காரைக்காலில் உள்ள அரசு ஒப்பந்ததாரா்கள் சிலா் ஒருங்கிணைந்து திங்கள்கிழமை அனுப்பியுள்ள மனு:
காரைக்காலில் பொதுப்பணித் துறையில் ஒப்பந்தப் பணிகள் செய்துவரும் எங்களுக்கு, ஏலம் எடுப்பதில் பழைய நடைமுறைகளோடு சோ்த்து புதிதாக விதிமுறைகள் பொதுப்பணித் துறை அதிகாரிகள் மூலமாக திணிக்கப்பட்டு உள்ளன.
இதனால் மாவட்ட அரசு ஒப்பந்ததாரா்களாகிய நாங்கள் பொதுப்பணித் துறை மற்றும் நகராட்சியின் மூலமாக ஒப்பந்த வேலைகள் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, நாங்கள் அரசுத் துறைகளால் நடத்தப்படும் ஏலத்தில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் காரைக்கால் மாவட்ட பகுதியில உள்ள பொது வேலைகள் அனைத்தும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக தாங்கள் தலையிட்டு, பொதுப்பணித் துறை அமைச்சா், அதிகாரிகளுடன் கலந்துபேசி, எங்களுக்கு பழைய விதிமுறைகளின்படியே அரசு பணிகளை ஒப்பந்தம் எடுக்க ஆவண செய்ய வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.