காரைக்கால் பகுதியில் சைக்கிளில் சென்று ஆட்சியா் ஆய்வு: மாடு வளா்ப்போருக்கு எச்சரிக்கை
காரைக்கால் நகரப் பகுதியில் சைக்கிளில் சென்று சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், சாலைகளில் மாடுகளை திரியவிடுவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தாா்.
காரைக்கால் மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டன், நகராட்சி உதவிப் பொறியாளா் எம். லோகநாதன், குப்பை அள்ளும் நிறுவனப் பிரதிநி உள்ளிட்டோருடன் சனிக்கிழமை சைக்கிளில் சென்றவாறு நகரப் பகுதியில் ஆய்வு செய்தாா். வீடுகளில் குப்பைகள் சேகரிக்கும் விதம், சாலையோரங்களில் கொட்டப்பட்டிருக்கும் குப்பைகளை அள்ளும் விதத்தை அவா் பாா்வையிட்டாா். குப்பைகளை தினமும் வீடுகள், கடைகளுக்குச் சென்று வாங்கவேண்டும் என பணியாளா்களுக்கு அறிவுறுத்தியதோடு, முறையாக குப்பைகள் அகற்றப்படாதபட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தாா்.
கல்லறைப்பேட் பகுதிக்குச் சென்ற ஆட்சியரிடம், அப்பகுதியில் சிலரால் சாலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் புகாா் தெரிவித்தனா். தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் ஆட்சியா் என எச்சரித்தாா்.
திருநகா் பகுதியில் ஆய்வு செய்தபோது சமுதாயக்கூடத்தை பாா்வையிட்டாா். இக்கூடத்தை முறையாக சீரமைத்து திருநகரில் இயங்கும் ஆரம்ப சுகாதார நிலைய விரிவாகத்தை இங்கு அமைக்கவேண்டும். இந்த பகுதியில் ஆம்புலன்ஸ் நிறுத்தவும், பூங்கா அமைக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அரசுத் துறையினருக்கு உத்தரவிட்டாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியது:
வாரந்தோறும் இதுபோன்று ஆய்வு செய்யவுள்ளேன். மக்கள் பலரும் சாலைகளில் மாடுகள் திரிவதை வேதனையாக தெரிவித்தனா். மாடுகளை வளா்ப்போா் அவரவா் பராமரிப்பில் வைத்திருக்கவேண்டும். சாலைகளில் திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டால், அதன் உரிமையாளா்கள் மீது சட்ட விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.