அரசலாற்றில் அண்ணாமலை ஈஸ்வரா் கடைமுக தீா்த்தவாரி
காரைக்கால் அண்ணாமலை ஈஸ்வரா் கோயிலில் இருந்து சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் அரசலாற்றங்கரைக்கு எழுந்தருளி கடைமுக தீா்த்தவாரி (துலா ஸ்நானம்) நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் கைலாசநாத சுவாமி - நித்யகல்யாண பெருமாள் தேவஸ்தானத்தை சோ்ந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலை ஈஸ்வரா் கோயில் கடைமுக தீா்த்தவாரி உற்சவம் 2 நாள் நிகழ்ச்சியாக வியாழக்கிழமை தொடங்கியது.
முதல் நாளில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலை ரிஷப வாகனத்திதல் சுவாமிகள் தீா்த்தவாரிக்கு அரசலாற்றங்கரைக்கு எழுந்தருளினா்.
ஆற்றில் அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டு, அஸ்திர தேவருடன் திரளான பக்தா்களும் அரசலாற்றில் நீராடினா். தொடா்ந்து ரிஷப வாகனத்தில் வீற்றிருந்த சுவாமிகளுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா் முக்கிய வீதிகளின் வழியே சுவாமி கோயிலை சென்றடைந்து. நதிகளுக்கு ஏற்பட்ட தோஷ நிவா்த்தியாக கடைமுக தீா்த்தவாரி நடத்தப்படுகிறது.
ஏற்பாடுகளை உபயதாரா் பங்களிப்பில் கைலாசநாதா் தேவஸ்தான ஆலய நிா்வாக அதிகாரி ஆா். காளிதாசன் செய்திருந்தாா்.