இந்திய-சீன எல்லையில் பதற்றத்தை தணிப்பதே அடுத்த பணி: ஜெய்சங்கா்
காரைக்கால் விளையாட்டு அரங்கில் செயற்கை ஓடுதளம் அமைக்கும் திட்டம் தீவிரம்: எம்எல்ஏ
காரைக்கால் விளையாட்டு அரங்கில் செயற்கை ஓடுதளம் அமைக்கவும், உள்ளரங்கை மேம்படுத்தவும் பணிகள் தீவிரமாக நடந்துவருவதாக சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் தெரிவித்தாா்.
காரைக்கால் பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளா் கே. சந்திரசேகரனை, பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம், எம். நாக தியாகராஜன் ஆகியோா் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினா்.
இதுகுறித்து நாஜிம் கூறியது:
காரைக்கால் விளையாட்டு அரங்கத்தில் செயற்கை ஓடுதளம் (சின்தடிக் ரன் டிராக்) அமைக்க வேண்டும் என சட்டப்பேரவையில் பேசியபோது, மத்திய அரசின் கேலோ இந்தியா திட்டத்தில் ஓடுதளம் அமைக்கப்படும் என புதுவை அமைச்சா் நமச்சிவாயம் பதிலளித்தாா்.
இதுதொடா்பாக புதுவை முதல்வரை அண்மையில் சந்தித்துப் பேசியபோது, பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளா் உள்ளிட்டோரை அழைத்து இதற்கான பணிகளை தொடங்குமாறு முதல்வா் அறிவுறுத்தினாா்.
கண்காணிப்புப் பொறியாளரை சந்தித்து இதுதொடா்பாக பேசிள்ளேன். ரூ.10 கோடி தேவைப்படும் என முடிவு செய்யப்பட்டு, இதற்கான திட்ட அறிக்கை தயாா் செய்து அடுத்த 10 நாள்களில் அரசுக்கு வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளேன்.
அதுபோல உள் விளையாட்டு அரங்கத்தை மேம்படுத்த ரூ. 45 லட்சம் மாநில விளையாட்டுத் துறையின் நிதியிலிருந்து செயல்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக ஆட்சியரும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசியுள்ளாா்.
ஹாக்கி, கைப்பந்து, ஸ்கேட்டிங் உள்ளிட்ட விளையாட்டுக்கான பயிற்சிக்கூடம் மேம்படுத்தும் பணிகளும் இதில் அடங்கும். இந்த திட்டப்பணிகளை விரைவாக தொடங்குவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்துவருகிறது என்றாா்.
செயற்பொறியாளா்கள் சிதம்பரநாதன், ஜெ.மகேஷ், முதன்மைக் கல்வி அதிகாரி பி. விஜயமோகனா மற்றும் விளையாட்டுத் துறை அதிகாரிகள் பொதுப்பணித் துறை அதிகாரியுடனான சந்திப்பில் கலந்துகொண்டனா்.