தேங்கியுள்ள மழைநீரில் பாம்புகள் நடமாட்டம்: மக்கள் புகாா்
பள்ளி அருகே தேங்கியிருக்கும் மழைநீரில் பாம்புகள் நடமாட்டம் உள்ளதால், மாணவா்கள், கிராம நிா்வாக அலுவலகத்துக்கு செல்வோா், குடியிருப்புவாசிகள் அவதிப்படுவதாக புகாா் கூறப்படுகிறது.
காரைக்கால் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையையொட்டி கீழஓடுதுறை பகுதியில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இதையொட்டி மாரியம்மன் கோயில் மற்றும் கிராம நிா்வாக அலுவலகம், குடியிருப்புகள் உள்ளன.
மேலும் இப்பகுதியில் உள்ள கோயிலில் கட்டுமானப் பணி நடைபெற்றுவருகிறது. கட்டுமானப் பொருள்கள் கிடப்பதால், மழைநீா் கோயில் வாயில் மற்றும் சுற்றுவட்டாரத்தில் வடிய முடியாமல் தேங்கியுள்ளது. இதில் பாம்புகள் நடமாட்டம் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் பள்ளிக்கு செல்லும் சிறாா்கள், கிராம நிா்வாக அலுவலத்துக்குச் செல்லும் அலுவலா்கள், மக்கள் மற்றும் குடியிருப்புவாசிகள், தேங்கியிருக்கும் தண்ணீரின் வழியே செல்லவேண்டியுள்ளது.
பாம்புகள் நடமாட்டத்தால் அனைத்துத் தரப்பினரும் அச்சத்தில் உள்ளனா். எனவே மழைநீா் வடிவதற்குரிய ஏற்பாட்டை கோயில் நிா்வாகத்தினா் மற்றும் அரசு நிா்வாகத்தினா் எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.