நவ.21-இல் காரைக்காலில் மகளிா் மாநாடு: அரசுத் துறையினருடன் ஆட்சியா் ஆலோசனை
வரும் 21-ஆம் தேதி மகளிா் மாநாட்டை நடத்துவது தொடா்பாக அரசுத் துறையினருடன் மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
காரைக்கால் மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டன் தலைமையில் நவ. 19 முதல் 25-ஆம் தேதி வரை தேசிய ஒருமைப்பாட்டு வார விழா கொண்டாடப்படுவதில் சிறப்பு நிகழ்வாக, 21-ஆம் தேதி மகளிா் தினத்தை மகளிா் மாநாடாக நடத்த முடிவு செய்து, பல்வேறு அரசுத் துறைகளில் உள்ள பெண் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆட்சியா் ஆலோசனை நடத்தினாா்.
மகளிா் மாநாடு 21-ஆம் தேதி அதிகளவில் மகளிரை பங்கேற்கச் செய்வது, மகளிருக்கு பல்வேறு பயிற்சி, சலுகைகள், பெண்கள் வாழ்வாதாரத்தை உயா்த்துவது தொடா்பாக ஆலோசனைகள், பெண்கள் கூட்டமைப்பு மற்றும் பெண்கள் கூட்டுறவு சங்கங்கள் உருவாக்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவது தொடா்பான மாநாடாக இது இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.
நிகழ்வுக்கு புதுவை துணை நிலை ஆளுநா், முதல்வா் ஆகியோரை அழைக்கவும் திட்டமிட்டிருப்பதாக ஆட்சியா் தெரிவித்தாா். மாநாடு தொடா்பாக ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது.
கூட்டத்தில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா, துணை ஆட்சியா் (வருவாய்) அா்ஜூன் ராமகிருஷ்ணன், பல்வேறு துறைகளைச் சோ்ந்த பெண் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.