kanguva: "என்னையும் கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள்" -'கங்குவா' குறித்து விஜய்...
காதலை மறுத்து வேறொருவருடன் நடந்த திருமணம்; 4 நாள்களில் நடந்த விபரீதம்
குஜராத்தில் பெண் ஒருவர் திருமணமான நான்கு நாளில் சொந்த கணவனை ஆள் வைத்து கடத்தி கொலை செய்துள்ளார். குஜராத்தில் உள்ள அகமதாபாத்தைச் சேர்ந்த பாவிக் என்பவர் காந்திநகரைச் சேர்ந்த பாயல் என்ற பெண்ணைக் கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டார்.
பாவிக் தன் மனைவியை அவரது பெற்றோர் வீட்டில் இருந்து அழைத்து வருவதற்காக இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டுச் சென்றார். அவர் புறப்பட்டு சென்று நீண்ட நேரம் ஆன பிறகும் வீடு திரும்பவில்லை. இதனால் பாவிக் பெற்றோர் அவரைத் தேட ஆரம்பித்தனர். அவர்கள் குடும்பத்துடன் சேர்ந்து பாயல் குடும்பமும் பாவிக்கை தேட ஆரம்பித்தது. இதில் பாவிக் சென்ற இருசக்கர வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அப்பகுதியில் விசாரித்தபோது நேரில் பார்த்த சிலர் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதாகத் தெரிவித்துள்ளனர். இரு சக்கர வாகனத்தை ஓட்டிய நபரை காரில் வந்தவர்கள் கடத்திச்சென்றதாகவும் குறிப்பிட்டனர்.
உடனே இது குறித்து இரு குடும்பமும் போலீஸில் புகார் செய்தது. போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். திருமணமாகி வெறும் 4 நாட்கள் மட்டுமே ஆகியிருந்ததால் மணமகள் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தீவிர விசாரணையில் தன் கணவனைக் கடத்திக் கொலை செய்துவிட்டதாக பாயல் தெரிவித்தார். பாயல் கொடுத்த தகவலின் அடிப்படையில் கல்பேஷ் உட்பட மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர். இதில் கல்பேஷை பாயல் காதலித்து வந்துள்ளார். ஆனால் அவர்களது காதலை ஏற்றுக்கொள்ளாத பாயல் குடும்பம் அவரை பாவிக்கிற்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இதனால் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கடத்திக் கொலை செய்ய உதவியிருக்கிறார். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,''பாவிக் தன் வீட்டில் இருந்து கிளம்பியவுடன் எங்கு வந்து கொண்டிருக்கிறீர்கள் என்று பாயல் போனில் கேட்டுள்ளார். உடனே பாவிக் தெரிவித்த தகவலை பாயல் தன் காதலனுக்கு தெரிவித்துள்ளார். கல்பேஷ் காரில் வந்து பாவிக் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியிருக்கிறார். இரு சக்கர வாகனத்தில் இருந்து பாவிக் கீழே விழுந்தவுடன் அவரை தங்களது காரில் கடத்திச்சென்றுள்ளனர். காரில் வைத்து பாவிக் கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை நர்மதா ஆற்று கால்வாயில் தூக்கிப்போட்டுள்ளனர்''என்று தெரிவித்தார். பாயலும் கைது செய்யப்பட்டார்.