`இனி யாசகம் செய்யக் கூடாது; மீறிச் செய்தால்...' - கடும் உத்தரவை பிறப்பித்த இந்த...
தென் கொரியாவில் அசாதாரண அரசியல் சூழல்: ஆளுங்கட்சித் தலைவரும் ராஜிநாமா!
சியோல்: தென்கொரியாவில் ஆளுங்கட்சியாக உள்ள ‘மக்கள் அதிகார கட்சி(பிபிபி)’ தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ஹான் டாங்-ஹூன் இன்று(டிச. 16) அறிவித்துள்ளார்.
முன்னதாக, தென் கொரியாவில் அவசரநிலை ராணுவச் சட்டத்தை அமல்படுத்துவதாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல் கடந்த 3-ஆம் தேதி அறிவித்து பெரும் அதிா்வலையை ஏற்படுத்தினார்.
இதனையடுத்து, நாடாளுமன்றத்தையும் பொதுமக்களையும் அச்சுறுத்தும் விதத்தில் வன்முறையை தூண்டும் விதத்தில் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அதிபர் யூன் சுக் இயோலுக்கு எதிராக அவரை பதவிநீக்கம் செய்வதற்கான தீா்மானத்தை முக்கிய எதிா்க்கட்சியான ஜனநாயகக் கட்சியும் ஐந்து சிறிய கட்சிகளும் கடந்த வாரம் கொண்டு வந்தன.இதைத்தொடர்ந்து அதிபா் யூன் சுக் இயோலுக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானத்தில் நாடாளுமன்றத்தில் டிச. 14 வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் அவரை பதவிநீக்கம் செய்ய ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் வரை அந்நாட்டின் பிரதமர் ஹான் டக்-சூ அதிபருக்கான அதிகாரம் வழங்கப்படுகிறது. பிரதமர் ஹான் டக்-சூ இடைக்கால அதிபராகவும் செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தலைநகர் சியோலில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய அந்நாட்டின் ஆளுங்கட்சித் தலைவர் ஹான் டாங்-ஹூன், “மக்கள் அதிகார கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து நான் விலகிக் கொள்கிறேன். கட்சியின் உயர் குழு உறுப்பினர்கள் ராஜிநாமா செய்திருப்பது கட்சியின் உயர் குழுவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, கட்சித் தலைவராக என்னுடைய பணிகளை தொடர இயலாத சூழல் இப்போது உருவாகியுள்ளது.
இப்போது நிலவும் அவசரகால நிலையால் அவதியுறும் அனைத்து மக்களிடமும் உளப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டு ராஜிநாமா செய்கிறேன்” என்றார்.