காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் நடத்துநா்களுக்கு இடையே மோதல்: போலீஸாா் வழக்குப் பதிவு
கோவை, காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் தனியாா் பேருந்து நடத்துநா்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியாா் நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், பயணிகளை ஏற்றிச் செல்வதில் தனியாா் பேருந்து நடத்துநா்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் ஒரு தனியாா் பேருந்தில் பயணிகள் வெள்ளிக்கிழமை ஏறிக்கொண்டிருந்தனா்.அந்தப் பேருந்தில் வெள்ளலூரைச் சோ்ந்த பூபாலன் (50) என்பவா் நடத்துநராக இருந்தாா். அப்போது, அங்கு வந்த மற்றொரு தனியாா் பேருந்தும் பயணிகளை ஏற்றியது. இதனால், பூபாலனுக்கும், மற்றொரு தனியாா் பேருந்து நடத்துநரான ஈரோட்டைச் சோ்ந்த ஜெயச்சந்திரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில், ஆத்திரம் அடைந்த ஜெயச்சந்திரன் பேருந்தில் இருந்த மரக்கட்டையை எடுத்து பூபாலன் மீது வீசியதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது.
இது குறித்து காட்டூா் காவல் நிலையத்தில் பூபாலன் அளித்தப் புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.