செய்திகள் :

காயத்ரி ராமாயணம்: மும்பையில் டாக்டர் யு.வி.வெங்கடேஷின் ஆன்மிகச் சொற்பொழிவு

post image
‘மந்திரங்களில் எல்லாம் மிகச்சிறந்தது காயத்ரீ’ என்கின்றன ஞானநூல்கள். பகவான் ஸ்ரீகிருஷ்ணரும் ‘மந்திரங்களில் நான் காயத்ரீயாக திகழ்கிறேன்’ என்று அருளியுள்ளார். விஸ்வாமித்திர மகரிஷி கண்டுசொன்ன இந்த மந்திரத்தில் ஒட்டு மொத்த வேதங்களின் சாராம்சமும் அடங்கும் என்பார்கள்.

காலை, மதியம், மாலை ஆகிய மூன்று காலங்களிலும் அந்தந்த சந்தியா ரூபங்களாக தியானிக்கப்படும் தேவதா மந்திர சொரூபமே காயத்ரி. பஞ்சபூதங்களையும், ஐந்து தன்மாத் திரைகளையும் உணர்த்தும் வகையில் ஐந்து திருமுகங்களுடனும், தானே தசமகா வித்யையாக திகழ்வதை உணர்த்தும் விதத்தில் பத்து திருக்கரங்களுடன், தாமரை மலரில் அமர்ந்து அருள்பாலிக்கிறாள் ஸ்ரீகாயத்ரீ தேவி. இந்த தேவியை வழிபட அழிவும், இழப்புகளும் விலகும் என்று பெரியோர்கள் அறிவுறுத்துவர்.

ஆன்மசுத்தியுடன் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை தியானித்து வழிபட, வேத பாராயணம் செய்த பலன் கிடைக்கும்; ஞான விருத்தி ஏற்படும். உடலும் உள்ளமும் ஒளிபெறும்.

ராமாயணத்தின் மகிமையையும் நாம் அறிவோம். ராமாயணத்தின் சுந்தரகாண்டம் பகுதியைப் படித்தால், சகல பிரச்னைகளும் தோஷங்களும் விலகும். அதேபோல், கல்யாணத் தடை நீங்க வேண்டுமெனில், பால காண்டத்தில் உள்ள சீதா கல்யாணத்தைத் தினமும் காலை மாலை இரண்டு வேளைகளிலும் படிக்க வேண்டும்.

குழந்தையில்லாத அன்பர்கள், பால காண்டத்தில் புத்திர காமேஸ்டி பாயஸ தான பாராயணக் கட்டத்தைப் பாராயணம் செய்ய வேண்டும். பால காண்டத்தில் உள்ள ராம அவதார வைபவத்தைத் தினமும் காலையில் படித்துவந்தால் சுகப்பிரசவம் நிகழும். அரசாங்கக் காரியங்களில் வெற்றி கிடைக்க, அயோத்யா காண்டத்தில் விவரிக்கப்படும் ராஜ தர்மங்களை பாராயணம் செய்யவேண்டும் என்பார்கள் பெரியோர்கள். இங்ஙனம், மானுடராய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் சகல செளபாக்கியங் களையும் தருவது ஶ்ரீராமாயண பாராயணம். இதன் பலன் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்று கருதினார்கள் அருளாளர்கள் பலரும். அதன் விளைவாகவே, வால்மீகி ராமாயணம் முதற்கொண்டு... ராமசரித மானஸ், கம்பராமாயணம், போத்தன்னா ராமாய ணம், அத்யாத்ம ராமாயணம், ஆனந்த ராமாயணம், ஹனுமத் ராமாயணம் எனப் பல்வேறு ராமாயண காவியங்கள் உலகெங்கும் பன்னெடுங்காலமாகப் போற்றிப் பூஜிக்கப்பட்டு வருகின்றன.

இந்த வரிசையில் காயத்ரி ராமாயணம் குறித்தும் சிறப்பித்து விளக்கியுள்ளார்கள் பெரியோர்கள். வால்மீகி மகரிஷி அருளிய ராமாயணம் 24,000 சுலோகங்கள் கொண்டது. காயத்ரி மந்திரம் 24 அட்சரங்கள் கொண்டது.

வால்மீகி ராமாயாணத்தை ஆயிரம் ஆயிரம் ஸ்லோகங்களாகப் பிரித்தால் இருபத்தி நான்கு பிரிவுகள் கிடைக்கும். ஒவ்வொரு பிரிவின் முதல் ஸ்லோகத்தையும் எடுத்து மொத்தம் 24 ஸ்லோகங்களைத் தொகுத்தனர். இந்த ஸ்லோகங்களின் தொகுப்பே காயத்ரி ராமாயணம்.

இதம் ராமாயணம் க்ருத்ஸ்னம் காயத்ரீபீஜஸம்யுதம்

த்ரிஸந்த்யம் ய: படேந்நித்யம் ஸர்வபாபை: ப்ரமுச்யதே

என்கிறது அதன் பலச்ருதி ஸ்லோகம். அதாவது, `இந்த காயத்ரி ராமாயணத்தை மூன்று சந்தியா வேளையிலும் படிப்பவர்கள், சர்வபாவங்களில் இருந்தும் விடுபடுவர்’ என்று அறிவுறுத்துகிறது.

இத்தகு காயத்ரி ராமாயணத்தின் மகிமைகள் எல்லோரையும் சென்றடையவேண்டும். எளியோருக்கும் இந்தப் புண்ணியபலன் கிடைக்கவேண்டும் எனும் நோக்குடன், மும்பையில் முதல் முறையாக காயத்ரி ராமாயணம் சொற்பொழிவு நடைபெறுகிறது.

மும்பையில் உள்ள சண்முகானந்தா மண்டபத்தில், வரும் 17.11.2024 அன்று, ஆன்மிகச் சொற்பொழிவளர் டாக்டர் யு.வி.வெங்கடேஷ் `காயத்ரி ராமாயணம்’ சொற்பொழிவு ஆற்றுகிறார். ராம மகிமைகள், ராமாயணக் கதைகள், காயத்ரி மகத்துவம், காயத்ரி ராமாயணச் சிறப்புகள் ஆகியவற்றுடன் கூடிய இந்தச் சொற்பொழிவு வைபவம், இதில் கலந்துகொள்ளும் அன்பர்கள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள - சிந்தையை மகிழ்விக்கும் ஆன்மிக அனுபவமாக அமையும் என்றால், அதுமிகையல்ல.!

ஐயப்பனை தரிசிக்கும் Sathiq Ali | அழுதா ஏறும்போது நிகழ்ந்த அற்புதம் | Vikatan

சாதிக் அலி, மாற்றுமதம் சார்ந்த அன்பர். ஐயப்பன் மீது கொண்ட ஆழ்ந்த பக்தி காரணமாக மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலைக்கு யாத்திரை மேற்கொண்டார். ஐயப்பன் மீதான பக்தி அவரை மீண்டும் மீண்டும் சபரிமலைக்குச் ச... மேலும் பார்க்க

கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யும்முறை இதுதான் | Kandha Sasti Kavasam - The essence of Mantras

பரிகாரம், வழிபாடு, ஆன்மிகம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்துவருகிறார் காளிகாம்பாள்கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர். இந்த வீடியோவில் கந்த சஷ்டி கவசம் பாராயண முறைகள் குறித்து விளக்குகிறார் காளிகாம்... மேலும் பார்க்க

கந்த சஷ்டி கவசத்தைவிட எளிதான ஷண்முகக் கவசம்; பாடலும் அது உருவான கதையும்!

அளவில் நெடிய கந்தசஷ்டி கவசத்தினை ஒருமுகமாக பாராயணம் செய்வது அனைவருக்கும் எளிதல்ல என்ற எண்ணம் பாம்பன் சுவாமிகளுக்குத் தோன்றியது.அதன் விளைவாகத் தோன்றியதே 'ஷண்முகக் கவசம்'ஷண்முகக் கவசம்தேவராய சுவாமிகளின்... மேலும் பார்க்க