காயல்: "ஆண் வர்க்கமே மோசம் என்று இருப்பதை உடைக்க விரும்பினேன்" - இயக்குநராகும் தமயந்தி பேட்டி
எழுத்தாளர் தமயந்தி முதன் முதலாக இயக்கிய 'காயல்' திரைப்படம் வெளியீட்டுக்குக் காத்திருக்கிறது. அதன் இறுதி கட்ட பரபரப்பில் இருக்கிறார் அவர்.
தான் இயக்கும் 'காயல்' படத்தின் அம்சங்களை அது கொண்டு வரும் உணர்வுகளை நம்மிடம் பகிர்ந்தார்.
'''காயல்' திரைப்படத்தை ஒரு ரொமான்டிக், ஃபேமிலி, டிராவல் ஸ்டோரியாக அதன் நல்ல தருணங்களைக் கொண்டு வர முயற்சி செய்திருக்கிறேன்.

இந்தச் சமூகம் பெண்களின் தன்னிச்சையான தேர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
உள்ளார்ந்து பெண்கள் ஒரு தனிமையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படிச் செய்வதால் நம்முடைய குடும்பங்களுக்கு உள்ளேயே ஒரு கனத்த மௌனம் நிகழ்கிறது.
அந்த மௌனத்தைக் கீறும் போது என்ன ஆகும் என்பதே இந்த படம்.
அப்பா-மகள், அம்மா-மகள் இந்த இரண்டு உறவுகளுக்கு அவ்வளவு ஒரு அழகு இருக்கிறது.
1947-ல் பிரிட்டிஷ் காரன் சுதந்திரம் கொடுத்து விட்டு போய் விட்டாலும் இன்னும் பல வீடுகளில் அப்பா-மகள், அம்மா-மகள் இரண்டு பேர்களுக்கு இடையிலும் சுதந்திரப் போராட்டம் நடந்துக் கொண்டே தான் இருக்கு.
இந்த இடைவெளியையும் 'காயல்' தெள்ளத் தெளிவாகப் பேசுகிறது'' - இன்னும் பேசுகிறார் இயக்குநர் தமயந்தி.
முத்திரைக் கதைகளை எழுதி முக்கிய இடத்தைப் பிடித்த எழுத்தாளர். இப்போது அனுபவப் படிகளில் ஏறி இயக்குநராக உருவாகி இருக்கிறார்.
''தற்கொலை வேண்டாம் என்று எல்லோருக்கும் சொன்ன பெண் அவளே தற்கொலை செய்து கொள்ளும் போது மனமுடைந்து போய்விடுகிறார்.

அஸ்தியைக் கரைக்க ராமேஸ்வரம் போகிற பயணத்தில் நினைவுகளாய் காட்சிகள் விரிகின்றன. மொத்தமாக ஆண் வர்க்கமே மோசம் என்று இருப்பதை உடைக்க விரும்பினேன்.
ஆண் பெண் உறவு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்று பேச விரும்பினேன். எங்கள் ஊரில் ஒருவரைப் பார்த்தவுடன் அவர் பெயரைக் கேட்டு விட்டு கேட்கிற இரண்டாவது கேள்வி, 'நீங்க என்ன ஆளுங்க?" என்பதுதான். இப்படிப்பட்ட ஆழ்மன சாதிய வேறுபாடுகளையும் 'காயல்' சுட்டிக்காட்டும்."
நடிகர்கள் உங்கள் விருப்பத்திற்கு அமைந்தார்களா?
''லிங்கேஷ் 'கபாலி'யில் பார்த்த நல்ல தமிழ் முகம். இந்த ஸ்கிரிப்ட் மனதிற்கு வந்ததும் அவர்தான் என் நினைவுக்கு வந்தார். அப்புறம் காயத்ரி.
புன்னகையோடு இருந்தாலும் கண்ணில் ஒரு மெல்லிய சோகம் இருக்கும். பிரமாதமான ரோலில் அவரும் நடித்திருக்கிறார்.
மலையாளத்தின் அனுமோல், 'நீ ஒரு வார்த்தை சொல்லு வந்துடுறேன்'னு சொன்னதை நினைவில் வைத்து மறக்காமல் வந்து நடித்திருக்கிறார். தயாரிப்பாளர் ஜேசு சுந்தரமாறன் பக்க பலமாக இருந்தார்.

என்னோடு முன்பு வேலை பார்த்த ஜஸ்டின் கெனன்யா தான் மியூசிக். பாடல்களை ரமேஷ் வைத்யாவும், நானும் எழுதி இருக்கிறோம்.
கார்த்திக் சுப்பிரமணியன் கேமரா. நீதி போதனை சொல்லி விடாமல் இதோ இப்படி இருக்கிறது. பார்த்துக் கொள்ளுங்கள்.. எனச் சில விஷயங்களைச் சொல்லி இருக்கிறேன்.
அப்படித்தான் இருக்கும் இந்த 'காயல்'. நிச்சயம் இந்தப் படம் உங்களை ஏமாற்றாது என்பதில் திடமாக இருக்கிறேன்'' என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...