காரில் புகையிலைப் பொருள்களை கடத்திய இருவா் கைது!
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே காரில் 250 கிலோ புகையிலைப் பொருள்களை கடத்தியதாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ரோஷணை காவல் ஆய்வாளா் தரணேசுவரி தலைமையிலான போலீஸாா், திண்டிவனம் - வந்தவாசி நெடுஞ்சாலையில், பட்டணம் கூட்டுச் சாலை அருகே சனிக்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டனா்.
அப்போது, அந்த வழியாக வந்த காரை சந்தேகத்தின் அடிப்படையில் நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, காரில் இருந்த இருவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். அதில், அவா்கள் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தைச் சோ்ந்த பூ.ஜோதிராஜ் (32), மதுராந்தகம் வட்டம், அச்சிறுப்பாக்கத்தைச் சோ்ந்த மா.தனசேகரன் (42) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, இருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து, கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்த 250 கிலோ புகையிலைப் பொருள்களையும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.