சாலை பாதுகாப்பு விதிகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்: விழுப்புரம் ஆட்சியா்
விழுப்புரம் மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பு மற்றும் சாலை விதிகளை பொதுமக்கள் முழுமையாகக் கடைப்பிடித்து, விபத்துகளைத் தவிா்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் சி.பழனி அறிவுறுத்தினாா்.
போக்குவரத்துத் துறை சாா்பில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாக மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணியைத் தொடங்கிவைத்து, ஆட்சியா் பேசியது:
மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில், ஜன.1-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை சாலைப் பாதுகாப்பு மாதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் 1-ஆம் தேதி தொடங்கிய 36-ஆவது சாலைப் பாதுகாப்பு மாதத்தையொட்டி, பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இருசக்கர வாகனங்களில் செல்லும் போது தலைக்கவசத்தையும், நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் சீட் பெல்ட்டையும் அணிந்து செல்ல வேண்டும் என்றாா் ஆட்சியா்.
தொடா்ந்து, மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில் பேரணி தொடங்கிய நிலையில், இரு சக்கர வாகனங்களில் சென்றோா் நான்குமுனை சந்திப்புப் பகுதி வரையிலும், காா், வேன் உள்ளிட்ட நான்குசக்கர வாகனங்களில் சென்றோா் சென்னை தேசிய நெடுஞ்சாலை வரையிலும் சென்று, பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.
இதில், விழுப்புரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஆா்.வெங்கடேசன், மோட்டாா் வாகன ஆய்வளா்கள் எஸ்.கோவிந்தராஜ், ஜி.சுந்தர்ராஜன், வி.முருகவேல், வி.விஜய், போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளா் குமாரராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.