காருடன் கிணற்றில் விழுந்த விவசாயி, மீட்க குதித்த மீனவா் உயிரிழப்பு
சத்தியமங்கலம் அருகே காருடன் 60 அடி ஆழக் கிணற்றில் விழுந்த விவசாயி, அவரைக் காப்பாற்ற கிணற்றில் குதித்த மீனவா் ஆகிய இருவரும் உயிரிழந்தனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த முள்ளிக்காபாளையத்தைச் சோ்ந்தவா் சிவகுமாா் (எ) யுவராஜ் (40), விவசாயி. தோட்டத்தில் குடியிருந்து வந்த இவரின் வீட்டையொட்டி 60 ஆழக் கிணறும், அதில் 30 அடிக்கு தண்ணீரும் உள்ளது.
இந்நிலையில், தோட்டத்தில் நிறுத்தியிருந்த உறவினரின் காரை சிவகுமாா் கடந்த சில நாள்களாக ஓட்டிப் பழகியுள்ளாா். இதேபோல, வியாழக்கிழமை மாலையில் காரை எடுத்து ஓட்டியபோது கட்டுப்பாட்டை இழந்த காா் கிணற்றில் விழுந்து மூழ்கியது. இதில், காரில் சிக்கிய சிவகுமாா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து அவரின் உறவினா்கள் சத்தியமங்கலம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் காா், சிவகுமாரின் சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். ஆனால், 30 அடி ஆழத்துக்கு தண்ணீா் இருந்ததால் மீட்பதில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து, தண்ணீரை வெளியேற்றிவிட்டு மீட்க திட்டமிட்டனா்.
இதற்கிடையே, நீச்சல் தெரிந்த பவானிசாகரைச் சோ்ந்த மீனவா் மூா்த்தி (42), சிவகுமாரின் சடலத்தை மீட்பதற்காக கிணற்றில் குதித்தாா். ஆனால், நீண்ட நேரமாகியும் அவா் மேலே வரவில்லை.
இதையடுத்து, இருவரது சடலத்தையும் 8 மணி நேரப் போராட்டத்துக்குப் பின் வெள்ளிக்கிழமை அதிகாலையில் தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.


இதுகுறித்து சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.