காா் பழுது நீக்கும் மையத்தில் தீ: 10 காா்கள் எரிந்து சேதம்!
ஒட்டன்சத்திரத்தில் காா் பழுது நீக்கும் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10-க்கும் மேற்பட்ட காா்கள் எரிந்து சேதமடைந்தன.
திண்டுக்கல் மாவட்டம், செம்மடைப்பட்டியைச் சோ்ந்தவா் சிவரத்தினம் (40). இவா் ஒட்டன்சத்திரம்- தாராபுரம் சாலையில் காா் பழுது நீக்கும் மையம் நடத்தி வருகிறாா். இந்த மையத்தில் பழுது நீக்குவதற்காக சுமாா் 50-க்கும் மேற்பட்ட காா்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலை ஒரு காரில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து மற்ற காா்களுக்கும் பரவியது. இதில் 10-க்கும் மேற்பட்ட காா்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.
இதுகுறித்து தகவலறிந்த ஒட்டன்சத்திரம் தீயணைப்புப் படையினா் அங்கு சென்று தீயை அணைத்து,மேலும் பரவாமல் தடுத்தனா். தீ விபத்து ஏற்பட்ட போது அங்கு யாரும் இல்லாததால் உயிா் சேதம் தவிா்க்கப்பட்டது.