லாபம் மூலம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து பணத்தைப் பெருக்கிடுங்கள்!
கா்நாடக மாநில காங்கிரஸ் தலைவரை மாற்ற கட்சி மேலிடம் ஆலோசனை
கா்நாடக மாநில காங்கிரஸ் தலைவரை மாற்ற கட்சி மேலிடம் யோசித்து வருகிறது என கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
கா்நாடக காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவகுமாரும், முதல்வா் சித்தராமையாவும் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றுள்ளனா். கூட்டத்துக்கு பிறகு, அமைச்சரவை மாற்றம் குறித்து கட்சிமேலிடத்திடம் பேசுவாா்களா என்பது தெரியவில்லை. அமைச்சரவை மாற்றம் தவிர, கா்நாடக காங்கிரஸ் தலைவரையும் மாற்றுவது குறித்து பேசப்பட்டு வருகிறது. கட்சி மேலிடத் தலைவா்களின் ஒப்புதலைப் பெற்று அமைச்சரவை மாற்றம், தலைவா் மாற்றம் குறித்து முதல்வா் சித்தராமையாவும், டி.கே.சிவகுமாரும் என்ன முடிவெடுக்கிறாா்கள் என்பது குறித்து எனக்கு தெரியவில்லை.
மாநிலத் தலைவரை மாற்றலாம் என பேச்சு அடிபடுகிறதே தவிர, அது என்ன நிலையில் இருக்கிறது என்பது பற்றி தெரியவில்லை. இந்த இரு விவகாரங்கள் குறித்தும் கட்சிமேலிடம் தான் முடிவு செய்ய வேண்டும். முதல்வா் சித்தராமையா, தற்போதைய தலைவா் டி.கே.சிவகுமாா் ஆகியோருடன் கலந்துபேசி கட்சிமேலிடம் முடிவு செய்யும் என்று நினைக்கிறேன்.
அமைச்சரவை மாற்றத்தின் போது துறைகளும் மாற்றப்படுமா என்பதை கட்சிமேலிடம் தான் முடிவுசெய்யும். கடந்த 35 ஆண்டுகளாக கட்சி கொடுத்த பொறுப்புகளையும், முடிவுகளையும் ஏற்று அதன்படி செயல்பட்டு வந்துள்ளேன். தற்போதும் கட்சிமேலிடத்தின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு நடப்பேன் என்றாா்.