ஃபகத் ஃபாசில், ஆலியா பட்... இன்னும் பலர்! ஏடிஎச்டி என்பது என்ன? காரணங்களும் தீர...
கிண்டி மருத்துவமனையில் இளைஞர் பலி! மருத்துவர்கள் இல்லை எனக் குற்றச்சாட்டு!
கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தார்.
மருத்துவர்கள் போராட்டத்தால் சரியான சிகிச்சை கிடைக்காததால்தான் உயிரிழப்பு நேரிட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
கிண்டி மருத்துவமனையின் புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை, இளைஞர் ஒருவர் புதன்கிழமை கத்தியால் குத்திய சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் அரசு மருத்துவர்கள் ஈடுபட்டனர். எனினும், அவசர சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், பெரும்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ்(வயது 30), பித்தப்பை கல் பிரச்னையால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற நிலையில், பணம் செலுத்த முடியாத காரணத்தால் வியாழக்கிழமை கலைஞர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவரை அவசர சிகிச்சைப் பிரிவில் பரிசோதித்த மருத்துவர்கள் பொதுப் பிரிவுக்கு வியாழக்கிழமை மாற்றியுள்ளனர். அங்கு விக்னேஷின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து, மீண்டும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஆனால், சிகிச்சைப் பலனளிகாமல் இன்று காலை விக்னேஷ் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில், வியாழக்கிழமை மருத்துவமனைக்கு வந்த விக்னேஷை முறையாக பரிசோதிக்காமல் பொதுப் பிரிவுக்கு மாற்றியதே அவரின் உயிரிழப்புக்கு காரணம் என்று உறவினர்கள் குற்றச்சாட்டை வைத்துள்ளனர்.
மேலும், இன்று காலை விக்னேஷின் உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், கலைஞர் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்த விக்னேஷுக்கு இரண்டு வயதில் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.
மருத்துவமனை விளக்கம்
விக்னேஷின் உயிரிழப்பு குறித்து கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
“உயிரிழந்த விக்னேஷ் அனுமதிக்கப்பட்ட நாளில், அனைத்து மருத்துவர்களும் பணியில் இருந்தனர். அவர் ஏற்கெனவே தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற பிறகுதான் அரசு மருத்துவமனைக்கு வருகை தந்தார்.
குடல் நோய் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு அவசர பிரிவுக்கு மாற்றப்பட்டு செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.
முறையான அனைத்து சிகிச்சையும் அளிக்கப்பட்ட நிலையிலும், சிகிச்சைப் பலனளிக்காமல் அவர் உயிரிழந்துவிட்டார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.