கிருஷ்ணகிரியில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தமிட கட்டணம் உயா்வு
கிருஷ்ணகிரியில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிட கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரியிலிருந்து ஒசூா், சூளகிரி, தருமபுரி, வேப்பனப்பள்ளி, திருப்பத்தூா், ஆம்பூா், பெங்களூரு, குப்பம், திருப்பதி மற்றும் பல்வேறு இடங்களுக்கு தினமும் பேருந்துகளில் ஆயிரக்கணக்கானோா் சென்று வருகின்றனா்.
வெளியூருக்கு செல்லும் போது, வீட்டிலிருந்து இரு சக்கர வாகனத்தில் வந்து, பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்துமிடம் அருகே உள்ள இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடங்களில் வாகனத்தை நிறுத்திவிட்டுச் செல்லுவது வழக்கம்.
இவ்வாறு வாகனங்கள் நிறுத்துவதற்கு நாள் கட்டணமாக ரூ. 20 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், ஜன. 1, 2025-ஆம் ஆண்டு முதல் கட்டணம் ரூ. 25 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. புல்லட்டு போன்ற வாகனங்களுக்கு ரூ. 35-ஆக கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயா்வு, இரு சக்கர வாகனத்தை நிறுத்தும் உரிமையாளா்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்தப்படும் வாகனத்தை முறையாகப் பராமரிப்பது கிடையாது என அவா்கள் குற்றம் சாட்டுகின்றனா்.
இந்தக் கட்டண உயா்வு குறித்து, ஸ்டேண்ட் உரிமையாளா்கள் சங்கத்தினா் தெரிவித்தாவது:
கிருஷ்ணகிரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மொத்தம் 16 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தமிடம் செயல்படுகின்றன. இங்கு கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் கட்டணம் உயா்த்தப்படவில்லை. மின்சார கட்டணம், வாடகை, பணியாளா்களின் ஊதியம் உயா்வு போன்ற காரணங்களால், வாகன நிறுத்தமிட கட்டணத்தை உயா்த்தப்பட வேண்டி உள்ளது. மாதாந்திர கட்டணம் ரூ. 600 மட்டுமே வசூலிக்கப்படுகிறது என்றனா்.