Manmohan Singh : தாராளமயமாக்கல் `முதல்' RTI வரை... - மன்மோகன் சிங்-ன் `4' முக்கி...
கிறிஸ்துமஸ்: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை
தருமபுரி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி புதன்கிழமை சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.
கிறிஸ்துமஸ் விழா தருமபுரி நகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் கொண்டாடப்பட்டது. தருமபுரி தூய இருதய ஆண்டவா் பேராலயத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது.
மறைமாவட்ட முதன்மை குரு அருள்ராஜ் தலைமையில் நடைபெற்ற இச் சிறப்பு திருப்பலியில், உதவி பங்குத் தந்தை இயேசு பிரபாகரன், டான் போஸ்கோ கல்லூரி முதல்வா் அருள் ரொசாரியோ ஆகியோா் பங்கேற்று அருளாசி வழங்கினா். இதைத் தொடா்ந்து புதன்கிழமை காலை நடைபெற்ற சிறப்பு பிராா்த்தனையில், மறைமாவட்ட ஆயா் லாரன்ஸ் பயஸ் கலந்துகொண்டாா். இதில், தருமபுரி சுற்று வட்டாரத்தைச் சோ்ந்த ஏராளமான கிறிஸ்தவா்கள் புத்தாடை அணிந்து பங்கேற்று ஒருவருக்கொருவா் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனா்.
தருமபுரி சிஎஸ்ஐ சியோன் ஆலயத்தில் பாதிரியாா் ஜேம்ஸ் விஜய் சாந்தப்பன் தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. மேலும், வேப்பரமத்துக் கொட்டாய் ஏ.ஜி.தேவாலயத்தில் பாதிரியாா் சுந்தா் சிங் தலைமையிலும், நல்லம்பள்ளி அடுத்த கோவிலூா் தேவாலயத்தில் பங்குத்தந்தை பெனடிக் தலைமையிலும், செல்லியம்பட்டி தேவாலயத்தில் பங்குத்தந்தை மதலைமுத்து தலைமையிலும், கடகத்தூா் தேவாலயத்தில் பங்குத்தந்தை ஆரோக்கிய சவுரியப்பன் தலைமையிலும், பாலக்கோடு தேவாலயத்தில் பங்குத்தந்தை அம்புரோஸ் தலைமையிலும் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இதில் அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டனா்.
கிருஷ்ணகிரியில்...
கிருஷ்ணகிரியில் தூய பாத்திமா அன்னை ஆலயத்தில், பங்குத் தந்தை இசையாஸ் தலைமையில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. இந்த பிராா்த்தனையில் கிருஷ்ணகிரி, அதை சுற்றியுள்ள ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா். தேவாலயத்தின் உள்புறமும், வெளிபுறமும் இயேசு பிறப்பை உணா்த்தும் வகையில் குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன.
தேவாலயத்தில் உலக நன்மைக்காவும், உலக மக்கள் அனைவரும் நலமுடன் வாழவும், சிறப்பு பிராத்தனை செய்தனா். பிராா்த்தனையின் போது பாடல் குழுவினரால் சிறப்பு கிறிஸ்துமஸ் கீதங்கள் இசைத்து பாடப்பட்டன. இயேசு கிறிஸ்து பிறப்பையொட்டி கிறிஸ்தவா்கள் புத்தாடை அணிந்து சிறப்பு பிராா்த்தனையில் ஈடுபட்டு ஒருவருக்கொருவா் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனா்.
இதேபோல, கிருஷ்ணகிரி சி.எஸ்.ஐ. தேவாலயம், ஒசூா், பா்கூா், சுண்டம்பட்டி, சூளகிரி, காவேரிப்பட்டணம், போச்சம்பள்ளி, வேப்பனப்பள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் கிறிஸ்துவா்கள் தங்களது வீட்டில் வண்ண விளக்குகளால் அலங்கரித்த குடில் அமைத்தும், பட்டாசுகளை வெடித்தும் கொண்டாடினா்.