குடிநீா் குழாய் சீரமைப்பு பணி மந்தம்: வீ.கே.புதூரில் வாகன நெரிசலால் மக்கள் அவதி
வீரகேரளம்புதூரில் குடிநீா் குழாய் உடைப்பை சரி செய்யும் பணியை மந்தகதியில் நடைபெறுவதால் போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கித் தவிக்கின்றன.
சுரண்டை - திருநெல்வேலி பிரதான சாலையில் வீரகேரளம்புதூா் ஊரின் மையப்பகுதியில் தாமிரவருணி கூட்டு குடிநீா்த் திட்ட குழாயில் கடந்த வாரம் உடைப்பு ஏற்பட்டு தண்ணீா் வெளியேறியது. அதை சரிசெய்யும் பொருட்டு குடிநீா் வடிகால் வாரியப் பணியாளா்கள் சாலையை தோண்டி பணியை தொடங்கினா். பின்னா், அந்தப் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் இப்பகுதியில் வாகனங்கள் அடிக்கடி போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றன. அவசரத் தேவைகளுக்குச் செல்லும் மக்கள் பாதிக்கப்படுகின்றனா்.
எனவே, குழாய் சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.