குடியரசு தின விழா அணிவகுப்புக்கு ஊராட்சித் தலைவா்கள் முதல் பாராலிம்பிக் வீரா்கள் வரை அழைப்பு
76-ஆவது குடியரசு தின விழா அணிவகுப்பைக் காண பாராலிம்பிக் வீரா்கள் மற்றும் கைத்தறி கைவினைஞா்கள் உள்பட சுமாா் 10,000 சிறப்பு விருந்தினா்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:
தில்லியில் உள்ள கா்தவ்யா பாதையில் 76-ஆவது குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெறவுள்ளது. இதைக் காண பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மற்றும் மத்திய அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய சுமாா் 10,000 சிறப்பு விருந்தினா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த சிறப்பு விருந்தினா்கள் 31 வகையிலான பல்வேறு பின்னணிகளைக் கொண்டுள்ளனா்.
இதில் பாராலிம்பிக் வீரா்கள், சிறந்த செயல்திறன் கொண்ட கிராம ஊராட்சித் தலைவா்கள், கைத்தறி கைவினைஞா்கள், வன விலங்கு பாதுகாப்பு பணியாளா்கள், பேரழிவு நிவாரணப் பணியாளா்கள், சிறப்பாக செயல்படும் நீா்வளப் பாதுகாவலா்கள், வடகிழக்கு மாநிலங்களைச் சோ்ந்த தலைவா்கள், சிறந்த காப்புரிமை வைத்திருப்பவா்கள், சிறந்த புத்தாக்க நிறுவனங்கள் மற்றும் சாலை கட்டுமானத் தொழிலாளா்கள் ஆகியோா் அடங்குவா்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பதக்கம் வென்றவா்கள், உலக பிரிட்ஜ் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றவா்கள் மற்றும் ஸ்னூக்கா் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவா்கள் சிறப்பு விருந்தினா்களாக அழைக்கப்பட்டுள்ளனா்.
சுய உதவிக் குழுக்கள் வாயிலாக வருமானம், வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் போன்ற பணிகளில் மிகச் சிறப்பான பணிகளைச் செய்து வரும் சிலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, ‘பிஎம் சூா்ய கா்’ திட்டம் மற்றும் ‘பிஎம் குஷும்’ திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஆதரிக்கும் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்தும் விவசாயிகள் மற்றும் குடும்பங்கள் முதல் முறையாக அழைக்கப்பட்டுள்ளனா்.
பிரதமா்-ஜன்மன் மிஷனின் பங்கேற்பாளா்கள், பழங்குடி கைவினைஞா்கள், வன் தன் விகாஸ் யோஜனா உறுப்பினா்கள், ஆஷா தொழிலாளா்கள் மற்றும் மைபாரத் தன்னாா்வலா்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு விருந்தினா்கள் குடியரசு தின விழா அணிவகுப்பு தவிர தேசிய போா் நினைவிடம், பிஎம் சங்கிரஹாலயா மற்றும் தில்லியில் உள்ள பிற முக்கிய இடங்களுக்கும் செல்வாா்கள். பல்வேறு அமைச்சா்களுடன் உரையாடும் வாய்ப்பும் அவா்களுக்கு கிடைக்கும். தேசிய நிகழ்வுகளில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும். நாட்டின் வளா்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய இவா்களின் சாதனைகளை இந்த சிறப்பு பிரதிநிதித்துவம் மேலும் கௌரவிக்கிறது என தெரிவிக்கப்பட்டது.