தை மாதப் பலன்கள்: `மேஷம் முதல் துலாம் வரை'- யாருக்கு என்ன யோகம்?
கும்பமேளா: பக்தர்களை கவர்ந்த சாதுக்கள்; 32 ஆண்டுகளாக குளிக்காமல் இருந்தும் புனிதநீராட மறுத்த பாபா!
உத்தரப்பிரதேசத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் மகா கும்பமேளா, அலகாபாத் எனப்படும் பிரயக்ராஜ் நகரில் நேற்று விமரிசையாக தொடங்கியது. இக்கும்பமேளாவிற்கு உலகம் முழுவதும் இருந்து இந்துக்கள் மட்டுமல்லாது அனைத்து மதத்தினரும் வந்த வண்ணம் இருக்கின்றனர். முதல் நாளான நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். அடுத்த மாதம் வரை நடக்கும் இக்கும்பமேளாவில் 45 கோடி பக்தர்கள் புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கும்பமேளாவிற்கு பல வினோதமான சாதுக்கள் வந்திருந்தனர். அவர்கள் பக்தர்களை வெகுவாக கவர்ந்தனர். ஒரு சாது தனது ஹார்லி டேவிட்சன் பைக்கில் வந்திருந்தார். தனக்கு ஒதுக்கப்பட்ட குடிலுக்கு வெளியில் ஹார்லி டேவிட்சன் பைக்கை நிறுத்தி இருந்தார். மற்றொரு பாபா குஜராத்தில் இருந்து ஸ்பிலண்டர் பைக்கில் வந்திருந்தார். அவர் 14 நாட்கள் தனது பைக்கிலேயே வந்து இந்த கும்பமேளாவில் கலந்து கொண்டுள்ளார்.
சோட்டுபாபா என்ற சாது பக்தர்களை வெகுவாக கவிர்ந்தார். அவர் வெறும் 3 அடிதான் இருக்கிறார். இதில் மற்றொரு சுவாரஸ்யம் என்னவென்றால் இந்த பாபா கடந்த 32 ஆண்டுகளாக குளிக்கவே இல்லையாம். கும்பமேளாவிலாவது குளிப்பார் என்று பார்த்தால் அங்கேயும் குளிக்க மறுத்துவிட்டார். இது குறித்து பாபா கூறுகையில், ''நான் 3 அடி 8 இஞ்ச்தான் இருக்கிறேன். எனது வயது 57 ஆகும். கும்பமேளாவிற்கு வந்தது மகிழ்ச்சியளிக்கிறது. ஆத்மாக்கள் இணையவேண்டும். நான் கும்பமேளாவில் புனித நீராடவில்லை. எனது வேண்டுதல் ஒன்று 32 ஆண்டுகளாக நிறைவேறாமல் இருக்கிறது. எனவே நான் கங்கையில் குளிக்கமாட்டேன்'' என்றார்.
மற்றொரு பாபா எதுவும் சாப்பிடுவது கிடையாது. அவரை அனைவரும் சாய்வாலா பாபா என்றுதான் அழைக்கின்றனர். தினமும் தேநீர் மட்டும் குடித்து வாழ்வதால் அவரை சாய்வாலா பாபா என்று அழைக்கின்றனர். தினேஷ் ஸ்வரூப் என்ற அந்த சாது பேசுவதும் கிடையாது. அமைதியாகவே இருக்கிறார். ஆனால் கடந்த 40 ஆண்டுகளாக சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி கொடுத்து வருகிறார். வாட்ஸ் ஆப் மூலம் இப்பயிற்சியை கொடுக்கிறார். தினமும் 10 தேநீர் மட்டும் குடிக்கிறார். மற்றொரு பாபா 50 ஆண்டுகள் பழமையான அம்பாசிட்டர் காரில் கும்பமேளாவிற்கு வந்திருந்தார். மற்றொரு பாபா கடந்த ஒன்பது ஆண்டுகளாக தனது கையை உயர்த்திக்கொண்டே இருக்கிறார். அவரது விரலில் உள்ள நகம் விரலை விட அதிக நீளமாக இருக்கிறது.
மரங்களை நடவேண்டும் என்று பிரசாரம் செய்து கொண்டிருக்கும் சுற்றுச்சூழல் பாபாவும் கும்பமேளாவிற்கு வந்திருந்தார்.
சாமியானாரான அமெரிக்க ராணுவ வீரர்
கும்பமேளாவிற்கு அமெரிக்க முன்னாள் ராணுவ வீரர் மிச்சேல் என்பவரும் வந்திருக்கிறார். ராணுவ விரராக இருந்த மிக்சேல் இப்போது பாபா மோக்ஷபுரி என்ற பெயரில் வந்திருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், ''நான் ஒரு குடும்பத்தையும் வேலையையும் கொண்ட ஒரு சாதாரண மனிதனாக இருந்தேன். ஆனால் வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமானது அல்ல என்பதை உணர்ந்தேன், அதனால் நான் இரட்சிப்புக்கான தேடலில் இறங்கினேன்" என்று கூறினார். சனாதன கொள்கையை பரப்புவதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஜப்பானில் இருந்து ஏராளமான யூடியூபர்கள் வந்திருந்தனர். இது தவிர பிரேசில் நாட்டில் இருந்து யோகா குரு சிகு, பிரான்ஸ் பத்திரிகையாளர் மெலினியா என உலகம் முழுவதும் இருந்து வெளிநாட்டு பக்தர்களும் அதிக அளவில் வந்துள்ளனர். கும்பமேளாவில் தொலைந்துவிடக் கூடாது என்பதற்காக ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கீதா, லலிதா ஆகிய சகோதரிகள் தங்களது கையில் உள்ள வளையலில் ரிப்பனால் கட்டிக்கொண்டு வந்திருந்தனர்.