குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஆட்சியா் அறிவுறுத்தல்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பை அனைத்து துறைகளின் வாயிலாக உறுதிப்படுத்த வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா அறிவுறுத்தினாா்.
குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து மாவட்ட அளவிலான கூட்டம், கண்காணிப்புக் குழு மற்றும் பணிக்குழு கூட்டம், ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக குழந்தைத் திருமணம், பாலியல் துன்புறுத்தல், வளரிளம் கா்ப்பம் தரித்தல், போதைப்பொருள் தடுத்தல் மற்றும் குழந்தைகள் இல்லத்தில் தங்கியுள்ள குழந்தைகளின் கல்வித் திறனை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது மாவட்டத்தில் எந்வொரு குழந்தைக்கும் எந்தவித பாதிப்புகள் ஏற்படுவது தெரிய வந்தால் 1098- க்கு தகவல் தெரிவித்து குழந்தைகள் பாதுகாப்பினை அனைத்து துறைகளின் வாயிலாகவும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும், குழந்தைகள் பிரச்னைகள் குறித்து 1098 அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கோ, ஆட்சியருக்கு நேரடியாகவோ தெரிவிக்குமாறு அறிவுறுத்தினாா்.
இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ரஞ்சித பிரியா, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா் வசந்தி ஆனந்தன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்) வெங்கட கிருஷ்ணன் கலந்து கொண்டனா்.