கூடலூர்: சிறையில் கைதி சித்ரவதை, 6 பேர் சஸ்பெண்ட் - நள்ளிரவு வரை நீண்ட விசாரணை! என்ன நடந்தது?
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள பாடந்துறை பகுதியைச் சேர்ந்தவர் 33 வயதான நிஜாமுதீன். தேவர் சோலை காவல்நிலைய போலீஸாருக்கும் நிஜாமுதீனுக்கும் இடையே கடந்த வாரம் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், போதைப்பொருள் வைத்திருந்தாக நிஜாமுதீனை கடந்த 12 -ம் தேதி தேவர்சோலை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.

நிஜாமுதீன் மீது வழக்குபதிவு செய்து கூடலூர் கிளை சிறையில் அடைத்துள்ளனர். சிறைக்குள் வைத்து இரும்பு கம்பியாலும் லத்தியாலும் நிஜாமுதீனை கண்மூடித்தனமாக தாக்கி காயத்தை ஏற்படுத்தியதாக அவரின் உறவினர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்திருக்கிறார்கள்.
இதன் அடிப்படையில் கூடலூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சிறையில் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சிறைத்துறையின் கோவை மண்டல டி.ஐ.ஜி நேற்று காலை முதல் நள்ளிரவு வரை கூடலூர் கிளை சிறையில் விசாரணை நடத்தியிருக்கிறார். சிறைக் காவலர்களின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட நிஜாமுதீனை ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அத்துமீறல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கூடலுார் கிளை சிறை கண்காணிப்பாளர் கங்காதரன், சிறைத்துறை காவலர்கள் மலர்வண்ணன், சின்னசாமி, தினேஷ் பாபு, அருண், கோபி ஆகிய 6 பேரையும் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளனர். இந்த அத்துமீறல் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.