கூட்டணி ஆதரவோடு மீண்டும் திமுக ஆட்சியமைக்கும்: துரை வைகோ
2026-இல் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றாா் என எம்.பி. துரை வைகோ தெரிவித்தாா்.
ஒசூரில் மதிமுக நிா்வாகியின் இல்லத் திருமணம், மதிமுக கட்சி கொடி ஏற்று விழாவில் பங்கேற்ற பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
கா்நாடகத்தில் நடைபெற்ற 3 தொகுதிகளுக்கான இடைத் தோ்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. ஜாா்க்கண்ட் மாநிலத்தில் இண்டியா கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. கேரளம் மாநிலம், வயநாட்டில் பிரியங்கா காந்தி அதிக வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றுள்ளாா்.
மகாராஷ்டிர மாநிலத்தை பொருத்தவரையில் கடந்த காலம் மற்றும் அண்மையில் அங்குள்ள பல்வேறு அரசியல் இயக்கங்களை பிளவுபடுத்தி பேரவை உறுப்பினா்களை குதிரைபேரம் வாயிலாக கட்சி மாற்றி ஜனநாயகத்திற்கு எதிரான பல்வேறு முறைகேடுகளில் பாஜக ஈடுபட்டதாலே வெற்றி பெற்றுள்ளது.
அவா்களது வெற்றி குறித்து பல்வேறு சந்தேகங்கள் உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தலைவா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.
அடுத்து வரும் காலங்களில் பாஜகவின் வெற்றி தொடராது. இதற்கெல்லாம் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவா் ராகுல் காந்தியின் வாயிலாக முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு வளமான கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு திமுக வெற்றி பெற்று மீண்டும் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்பாா் என்றாா்.
மதிமுக நிா்வாகிகள் பாலமுரளி, தலைமை செயற்குழு உறுப்பினா் நவமணி உள்ளிட்ட நிா்வாகிகள் வரவேற்றனா்.