கூட்டணி குறித்து அமித் ஷா தெளிவாகக் கூறிவிட்டார்: ஜி.கே.வாசன்
அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்று மத்திய அமைச்சர் அமித் ஷா தெளிவாகக் கூறிவிட்டதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தலையொட்டி அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் உருவாகியுள்ளது. மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலும் தமிழகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் கூட்டணி என மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தார். தேர்தல் முடிவுக்குப் பின்னர் ஆட்சியமைப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கூறினார்.
இந்நிலையில் அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் மட்டுமே இருக்கும், அதிமுகதான் ஆட்சியமைக்கும், கூட்டணி ஆட்சிக்கு இடமில்லை என்று அதிமுகவினர் கூறி வருகின்றனர்.
அதேநேரத்தில் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என பாஜகவினர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், 'அமித் ஷாவும் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து முடிவெடுப்பார்கள். அதிமுக - பாஜக கூட்டணியை பிளவுபடுத்த வேண்டாம்' என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பாஜக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், "மத்திய அமைச்சர் அமித் ஷா, எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் கூட்டணி என்று தெளிவாகக் கூறிவிட்டார்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியாக இருக்கும். தமிழகத்தில் அதிமுக தலைமையில் ஆட்சி, மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என அமித் ஷா கூறியுள்ளார்.
தமிழகத்தில் இந்த கூட்டணி வெற்றி கூட்டணியாக இருப்பதால் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.