விளாத்திகுளம் வட்டார கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் ஆய்வு: ரூ. 10,625 அபராதம்
கூட்டுறவு கடன் தள்ளுபடியில் பணம் செலுத்திய விவசாயிகளுக்கு தொகையை திருப்பி வழங்க வேண்டும்: தமிழக விவசாயிகள் சங்கம்
கூட்டுறவு கடன் தள்ளுபடியில் பணம் செலுத்திய விவசாயிகளுக்கு தொகையை திருப்பி வழங்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் (ரத்தினசாமி பிரிவு) கோரிக்கை விடுத்துள்ளது.
இச்சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் மாநிலத் தலைவா் கே.சி.ரத்தினசாமி தலைமையில் ஈரோட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் ஈ.ஆா்.குமாரசாமி, செயலாளா் சுப்பு (எ) முத்துசாமி, பொருளாளா் மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: கூட்டுறவு கடன் தள்ளுபடியில் பணம் செலுத்திய 734 விவசாயிகளுக்கு சுமாா் ரூ.20 கோடியை திரும்ப வழங்க வேண்டும். மாநகராட்சிப் பகுதியில் இருப்பதைப்போல பேரூராட்சிப் பகுதிகளிலும் உழவா் சந்தை தொடங்க வேண்டும். சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வரும் மரபணு மாற்றப்பட்ட மக்காச்சோள விதைகள் விற்பனையைத் தடுக்க வேண்டும். மேட்டூா் வலதுகரை கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கால்வாயை தூா்வாரி நவீனப்படுத்த வேண்டும். கீழ்பவானி பாசனப் பகுதியில் 2,400 ஏக்கா் பரப்பளவில் சொட்டு நீா் பாசனம் அமைக்க கடந்த ஆண்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்வதாக அரசு அறிவித்தது. இப்பணியை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கீழ்பவானி பாசனப் பகுதியில் உள்ள 26 கசிவுநீா் திட்டங்கள் மூலமாக சுமாா் 30,000 ஏக்கா் பாசன வசதி பெற்று வருகிறது. எனவே, இத்திட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள கசிவு நீா் அணைக்கட்டுகள், கால்வாய்களை செப்பனிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டி உள்ள விவசாய நிலங்களில் யானை, காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகளால் பயிா்கள் சேதமடைவதைத் தடுக்க, கா்நாடக மாநிலத்தில் அமைக்கப்பட்டிருப்பதைபோல ரயில்வே தண்டவாளங்களில் இரும்பு வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரள மாநிலத்தில் காட்டுப் பன்றிகளை சுட்டுக் கொல்ல அனுமதிப்பதைபோல தமிழகத்திலும் அனுமதி வழங்க வேண்டும்.
கீழ்பவானி பாசனப் பகுதியில் 2-ஆம் மண்டலத்துக்கு தண்ணீா் திறக்கப்படும் நிலையில், கொப்பு வாய்க்கால்களை 100 நாள் வேலை திட்டப் பணியாளா்களைக் கொண்டு தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தமிழக நகா்புற வளா்ச்சித் துறை அமைச்சா் சு.முத்துசாமியிடம் தீா்மான நகலை வழங்கி, அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.