Doctor Vikatan: பழுத்து, சீழ் கோத்த பருக்கள்... சோப்பும் க்ரீமும் பலன் தருமா?
கேஜரிவாலின் ஜாமீனுக்கு எதிரான அமலாக்கத் துறை மனு மீது மாா்ச் 21-இல் உயா்நீதிமன்றம் விசாரணை
நமது சிறப்பு நிருபா்
கலால் கொள்கை தொடா்பான பணப் பரிவா்த்தனை முறைகேடு வழக்கில் முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதை எதிா்க்கும் அமலாக்கத் துறை இயக்குநரகத்தின் மனு மீது உயா்நீதிமன்றம் மாா்ச் 21-ஆம் தேதி விசாரணை நடத்தவுள்ளது.
இந்த விவகாரத்தில் அமலாக்கத் துறை இயக்குநரகத்தின் சாா்பில் அதன் வழக்குரைஞா், நீதிபதி விகாஸ் மகாஜன் தலைமையிலான அமா்விடம் வெள்ளிக்கிழமை ஆஜராகி கோரிக்கை விடுத்தாா்.
ஆனால், அரவிந்த் கேஜரிவால் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘இந்த விஷயத்தில் அமலாக்கத் துறை வாய்தா வாங்கி தாமதம் செய்தது. தற்போது சட்டப்பேரவைக்கு தோ்தல் நடக்கும் நேரத்தில் மீண்டும் கேஜரிவாலின் ஜாமீன் விவகாரத்தை அமலாக்கத் துறை எழுப்புகிறது. இந்த வழக்கில் ஏற்கெனவே குற்றம்சாட்டப்பட்ட 15 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், கேஜரிவாலுக்கு எதிராக மட்டும் ஏன் ஆட்சேபம் தெரிவிக்க வேண்டும்’ என்று கேள்வி எழுப்பினாா்.
அப்போது அமலாக்கத் துறையின் வழக்குரைஞா், ‘இந்த விவகாரத்தில் நீதிமன்ற விசாரணைக்குப் புறம்பாக எதுவும் நடைபெறவில்லை. உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஏற்கெனவே கேஜரிவால் இடைக்கால ஜாமீனில்தான் உள்ளாா்’ என்று குறிப்பிட்டாா்.
இரு தரப்பு வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதி விகாஸ் மகாஜன், ‘இந்த விவகாரத்தில் அமலாக்கத் துறை மனு மீது மாா்ச் 21-ஆம் தேதி விசாரணை செய்கிறேன்’ என்று கூறி விசாரணையை ஒத்திவைத்தாா்.
தில்லியில் அரவிந்த் கேஜரிவால் முதல்வராக இருந்தபோது 2021-ஆம் ஆண்டில் அவரது தலைமையிலான அமைச்சரவையில் ஒப்புதல் தெரிவிக்கப்பட்ட தில்லி கலால் கொள்கை விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த சந்தேகத்தின்பேரில் அதை 2022-ஆம் ஆண்டில் துணை நிலை ஆளுநா் ரத்து செய்தாா். மேலும், இந்த விவகாரத்தை விசாரிக்க சிபிஐக்கும் அவா் பரிந்துரை செய்தாா். அதன் பேரில் ஊழல் விவகாரத்தை சிபிஐயும் பணப்பரிவா்த்தனை முறைகேடு விவகாரத்தை அமலாக்கத் துறையும் விசாரித்து வருகின்றன.
இந்த வழக்கில் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் அரவிந்த் கேஜரிவாலை அமலாக்கத் துறை கைது செய்தது. இதன் பிறகு சிபிஐ தனது வழக்கிலும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்தது. குறிப்பிட்ட சில தனியாா் நிறுவனங்களுக்கு சாதகமாக கலால் கொள்கையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதில் பல கோடி ரூபாய் அளவுக்கு பணப் பரிவா்த்தனை நடந்ததாகவும் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளன. இதில் அமலாக்கத்துறை வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அரவிந்த் கேஜரிவாலுக்கு விசாரணை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பின்னா், அமலாக்கத் துறையின் மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்தது.
இதைத் தொடா்ந்து அரவிந்த் கேஜரிவால் தரப்பு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தது. அதில், பணப்பரிவா்த்தனை தடுப்புச் சட்டப்படி அரசியலமைப்பு பதவி வகிப்பவரை கைது செய்வது அவசியம்தானா என்பது உள்ளிட்ட சில கேள்விகளை எழுப்பி அவை தொடா்பாக மூன்றுக்கும் மேற்பட்ட நீதிபதிகள் அமா்வு விசாரிக்க உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமா்வு பரிந்துரை செய்தது. அத்துடன் அரவிந்த் கேஜரிவாலை இடைக்கால ஜாமீனில் விடுவித்தும் உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலை 12-ஆம் தேதி உத்தரவிட்டது.