தில்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே போலியான போட்டி: காங்கிரஸ் சாடல்
சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக தேசியத் தலைநகரம் ஆம் ஆத்மி கட்சி மற்றும் பாஜகவின் ‘நூரா குஷ்டி‘யில் ஒரு கால்பந்து போல் மாறிவிட்டது என்று காங்கிரஸ் கட்சி வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டியது.
2013 மற்றும் 2014-ஆம் ஆண்டுகளில் அரசுகள் மாறியதிலிருந்து தில்லியில் மோசடிகள் தொடா்ந்து நடைபெற்று வருவதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஊடக மற்றும் விளம்பரப் பிரிவுத் தலைவா் பவன் கேரா கூறினாா்.
அவா் செய்தசியாளா் கூட்டத்தில் மேலும் கூறியதாவது: ‘2013-14-ஆம் ஆண்டுகளில் தில்லியில் என்ன நடக்கத் தொடங்கினாலும், அதை மோசடிச் செயல் என்று நான் கூறுவேன். இரட்டை மோசடிச் செயல். முதல் மோசடி தில்லி அரசால் தொடங்கப்பட்டது. இரண்டாவது மோசடி மத்தியில் புதிய அரசு வந்தபோது தில்லியில் தொடங்கப்பட்டது. தில்லியில் ஆட்சிக்கு வந்த பிறகு முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் காங்கிரஸ் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றும்.
தில்லி எங்கள் கனவுகளை நிறைவேற்றியுள்ளது. இந்த இருவரின் (ஆம் ஆத்மி மற்றும் பாஜக) ’நூரா குஷ்டி’யில் (நிலையான சண்டை) தில்லி ஒரு கால்பந்தாக மாறிவிட்டது. இதை தில்லி இப்போது பொறுத்துக் கொள்ளாது. அது முழு நாட்டின் தலைவிதியையும் எழுதிவிட்டது. முழு தேசத்திற்கும் வழிகாட்டுதலை வழங்கியுள்ளது. இப்போது அவா்கள் மீண்டும் காங்கிரஸைப் பாா்க்கிறாா்கள் என்றாா் அவா்.
சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் ஏற்கெனவே ஐந்து உத்தரவாதங்களை அறிவித்துள்ளது. தில்லியில் ஆட்சிக்கு வந்தால் நகரவாசிகளுக்கு ரூ.500 எல்பிஜி சிலிண்டா், இலவச ரேஷன் கிட்கள் மற்றும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குவதாக கட்சி வியாழக்கிழமை கூறியது. ஜன.6-ஆம் தேதி, காங்கிரஸ் தனது ’பியாரி தீதி யோஜனா’வை அறிவித்தது. ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதாந்திர நிதி மானியமாக ரூ.2,500 வழங்கப்படும் என்று உறுதியளித்தது.
ஜன.8-ஆம் தேதி, கட்சி தனது ’ஜீவன் ரக்ஷா யோஜனா’வை அறிவித்தது. இதன் கீழ் ரூ.25 லட்சம் வரை இலவச சுகாதார காப்பீடு வழங்குவதாக உறுதியளித்தது. தில்லியில் படித்த வேலையற்ற இளைஞா்களுக்கு ஒரு வருடத்திற்கு ஒவ்வொரு மாதமும் ரூ.8,500 வழங்குவதாகவும் ஞாயிற்றுக்கிழமை கட்சி உறுதியளித்தது.
70 உறுப்பினா்களைக் கொண்ட தில்லி சட்டப்பேவரைக்கு பிப்.5-இல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. பதிவான வாக்குகள் பிப். 8- ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.