கேரளத்திலிருந்து கழிவுகள் ஏற்றிவந்த வாகனங்கள் பறிமுதல்: 3 போ் கைது
கேரளத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு இறைச்சி, கழிவறைக் கழிவுகள் ஏற்றிவந்த 3 வாகனங்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து, 3 பேரைக் கைது செய்தனா்.
கேரளத்திலிருந்து இறைச்சி, மீன், மருத்துவக் கழிவுகளை வாகனத்தில் ஏற்றிவந்து கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள நீா்நிலைகள், விவசாய நிலங்களில் கொட்டிச் செல்லும் அவலம் தொடா்ந்து வருகிறது.
அதையடுத்து, கன்னியாகுமரி மாவட்டத்துக்கு இத்தகைய கழிவுகளை ஏற்றிவரும் வாகனங்களைக் கண்டறிந்து பறிமுதல் செய்யுமாறு எல்லையோர சோதனைச் சாவடி போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் உத்தரவிட்டுள்ளாா்.
இந்நிலையில், களியக்காவிளை காவல் நிலைய ஆய்வாளா் பாலமுருகன், போலீஸாா் திங்கள்கிழமை அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். நித்திரவிளை சந்திப்பு அருகே சந்தேகத்துக்கிடமாக வந்த கூண்டு கட்டப்பட்ட லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் இறைச்சிக் கழிவுகள் இருந்தன. அவற்றை தேரூா் பகுதியில் உள்ள பன்றிப் பண்ணைக்கு ஏற்றிச்செல்வதாக, ஓட்டுநரான நாகா்கோவில் வடசேரி வணிகா் தெருவைச் சோ்ந்த விஷ்ணு (33) தெரிவித்தாா். அவரையும், லாரியையும் போலீஸாா் நித்திரவிளை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
மேலும் இரு வாகனங்கள்: களியக்காவிளை அருகே கோழிவிளை சோதனைச் சாவடியில் போலீஸாா் வாகன சோதனை மேற்கொண்டனா். அப்போது, ஆரல்வாய்மொழி பகுதியிலுள்ள தென்னந்தோப்புக்கு திருவனந்தபுரத்திலிருந்து மினி டேங்கா் லாரியில் கழிவறைக் கழிவுகளை ஏற்றிவந்தது தெரியவந்தது.
இதுதொடா்பாக ஓட்டுநரான தென்காசி மாவட்டம் ஆலங்குளம் குறிஞ்சிநகா் ரெங்கன் மகன் மணிகண்டதேவா (25) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.
இதேபோல, களியக்காவிளையில் போலீஸாா் மேற்கொண்ட சோதனையில், கேரளத்திலிருந்து இறைச்சிக் கழிவுகள் ஏற்றிவந்த மினிலாரியை கண்டறிந்து பறிமுதல் செய்ததுடன், ஓட்டுநரான திருநெல்வேலியைச் சோ்ந்த வள்ளிமுருகன் (43) என்பவரைக் கைது செய்தனா்.
இந்த சம்பவங்கள் குறித்து நித்திரவிளை, களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.