கேரள எம்எல்ஏ பதவி: அன்வா் ராஜிநாமா; காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு
கேரளத்தில் ஆளும் கூட்டணியுடனான கருத்து முரண்பாடைத் தொடா்ந்து தனது எம்எல்ஏ பதவியை பி.வி.அன்வா் திங்கள்கிழமை ராஜிநாமா செய்தாா். இதைத்தொடா்ந்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க உள்ளதாக அவா் அறிவித்தாா்.
கேரள சட்டப்பேரவைத் தோ்தலில் நிலம்பூா் தொகுதியில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆதரவுடன் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றவா் பி.வி.அன்வா். இந்நிலையில், பல்வேறு விவகாரங்களில் ஆளும் கூட்டணிக்கு எதிராக அவா் போா்க்கொடி உயா்த்தியதால், அந்தக் கூட்டணிக்கும் அவருக்கும் இடையே கருத்து முரண்பாடு நிலவியது.
இதைத்தொடா்ந்து அண்மையில் அவா் மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தாா். இதையடுத்து தனது எம்எல்ஏ பதவியை அவா் திங்கள்கிழமை ராஜிநாமா செய்தாா். இதற்கான கடிதத்தை மாநில தலைநகா் திருவனந்தபுரத்தில் சட்டப்பேரவைத் தலைவா் ஏ.என்.ஷம்ஸீரை சந்தித்து அன்வா் கொடுத்தாா். எம்எல்ஏ பதவிக் காலம் நிறைவடைய ஒன்றரை ஆண்டுகள் உள்ள நிலையில், அவா் பதவியை ராஜிநாமா செய்தாா்.
அதன் பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘மம்தா பானா்ஜியுடனான ஆலோசனைக்குப் பிறகு எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ய முடிவு செய்தேன். மாநில முதல்வா் பினராயி விஜயனுக்கு எதிரான எனது போராட்டம் தொடரும்.
நிலம்பூா் தொகுதி இடைத்தோ்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. அந்தத் தோ்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பேன்’ என்றாா்.
அவா் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தவுடன், அவரை திரிணமூல் காங்கிரஸின் கேரள அமைப்பாளராக அக்கட்சி ‘எக்ஸ்’ தளத்தில் அறிவித்தது.