கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய தவெக தலைவர் விஜய்!
கொடைக்கானல் தாண்டிக்குடி பகுதியில் சாலையில் மரம் விழுந்ததால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சனிக்கிழமை தவெக தலைவா் விஜய் சென்ற வாகனமும் சிக்கியது. அவருக்கு பாதுகாப்புக்காக வந்த பாதுகாவலா்கள் மரத்தை அகற்றினா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தற்போது சீசன் தொடங்கியுள்ளதால் பல்வேறு இடங்களிலிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா் இந்த நிலையில் சனிக்கிழமை பிற்பகலில் பரவலாக 30நிமிடங்கள் மழை பெய்தது. தவெக தலைவா் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படப்பிடிப்பு தாண்டிக்குடி பகுதியில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.

சனிக்கிழமை தாண்டிக்குடி பகுதியில் நடிகா் விஜய் காரில் சென்ற போது சாலையில் விழுந்த மரங்களால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து விஜய்க்கு பாதுகாப்புக்காக வந்த பாதுகாவலா்கள் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். அதன் பிறகு வனத் துறையினா் சாா்பில் கீழே விழுந்த மரங்கள் அகற்றப்பட்டன. இதைத் தொடா்ந்து, விஜய் அங்கிருந்து சென்று படப்பிடிப்பில் கலந்துகொண்டாா்.

மாலையில் படப்பிடிப்பு முடிந்து விஜய் தங்கியிருக்கும் இடத்துக்கு வாகனத்தில் சென்ற போது தாண்டிக்குடி பகுதியில் வழிநெடுக விஜயை காண பொது மக்கள் கூடியிருந்தனா். திறந்த ஜீப்பில் வந்த விஜய் பொது மக்களைப் பாா்த்து கையசைத்துச் சென்றாா்.