ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை: துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை!
கொலையுண்ட மனைவி உயிருடன் கண்டுபிடிப்பு! 3 ஆண்டுகள் கழித்து கணவர் விடுதலை!
கர்நாடகத்தில் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட மனைவி உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டதால் 3 ஆண்டுகள் கழித்து அவரது கணவர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
குடகு மாவட்டத்தின் பசவனஹல்லி பழங்குடியினர் முகாமைச் சேர்ந்தவர் குருபரா சுரேஷ் (வயது 35), இவர் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் மல்லிகே என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 18 வயதில் ஒரு மகனும், 15 வயது மகளும் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு திடீரென மல்லிகே மாயமாகியதால், குஷால் நகர் காவல் நிலையத்தில் சுரேஷ் புகாரளித்துள்ளார். பின்னர், விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் மைசூர் மாவட்டத்தின் காவேரி ஆற்றின் கரையில் ஒரு பெண்ணின் எலும்புகளை மீட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, மீட்கப்பட்ட எலும்புகள் மல்லிகேவுடையது என உறுதிச் செய்த காவல் துறையினர் இந்த வழக்கில் சுரேஷ் தான் கொலையாளி எனக் கூறி அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து கடந்த 2021 ஆம் ஆண்டு கைது செய்து அவரை சிறையில் அடைத்தனர்.
பின்னர், கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பரில் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டாலும், பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு வழங்க வேண்டிய ரூ.1 லட்சம் தொகையை அவரால் செலுத்த முடியாத காரணத்தினால் 2024 செப்டம்பரில்தான் அவர் ஜாமினில் வெளியே வந்துள்ளார்.
தனது நண்பர்களுடன் இணைந்து அவரது மனைவியைத் தேடிய சுரேஷ், கடந்த ஏப்.1 அன்று சுமார் 20 கி.மீ. தொலைவிலுள்ள கிராமத்தில் மல்லிகே அவரது காதலனன கணேஷ் என்பவருடன் வாழ்ந்து வருவதைக் கண்டுபிடித்துள்ளார்.
பின்னர், அவரது வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அங்கு, அவரது குற்றசாட்டுக்கு ஆதாரம் கேட்கப்பட்ட நிலையில் மல்லிகே அவரது காதலனுடன் ஒரு உணவகத்தில் அமர்ந்து சாப்பிடும் விடியோ பதிவுகளை சமர்பித்துள்ளனர்.
அந்த ஆதாரங்களை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் சுரேஷை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், மல்லிகேவை காவலில் எடுத்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் அவர் தாமாக தனது காதலனுடன் சென்று வாழ முடிவு செய்து சென்றதாகக் கூறியுள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சுரேஷ் கூறுகையில், இந்த வழக்கை விசாரித்த காவல் துறையினர் தன்னை சித்ரவதை செய்து அவர்கள் மீட்ட எலும்புகள் தனது மனைவியுடையதுதான் என்று ஒப்புக்கொள்ள வைத்ததாகவும் அவரை கட்டாயப்படுத்தி சில ஆவணங்களில் கையெழுத்திட வைத்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும், சுரேஷ் கைதானதால் 10-ம் வகுப்பு படித்து வந்த அவரது மகன் கிருஷ்ணா தனது படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு அவர்களது பாட்டியுடன் வாழ்ந்து வந்த நிலையில் வேலைக்கு சென்று தனது தங்கையைப் படிக்க வைத்துள்ளார்.
இதுபற்றி சுரேஷின் வழக்கறிஞர் பண்டு புஜாரி கூறுகையில், காவல் துறையினர் முழுமையான விசாரணை மேற்கொள்ளாமல் மீட்கப்பட்ட எலும்புகளின் டி.என்.ஏ. பரிசோதனை முடிவுகள் வெளியாகும் முன்னரே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து அவரை சிறையில் அடைத்ததாகக் குற்றம்சாட்டியுள்ளார்.