மியான்மர் நிலநடுக்கம்: இந்தியா உள்ளிட்ட குவாட் நாடுகள் சேர்ந்து 20 மில்லியன் டாலர் நிதியுதவி
மியான்மரில் கடந்த வாரம் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்துக்கு நிவாரண உதவிகளை வழங்க இந்தியா உள்பட குவாட் நாடுகள் ஒன்றுசேர்ந்துள்ளன.
மியான்மரில் கடந்த மார்ச் 28 ஆம் தேதியில் சகாய்ங் நகரின் வடமேற்கே 16 கி.மீ. தொலைவில் பகல் 12 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 7.7 புள்ளியாகப் பதிவானதைத் தொடர்ந்து, மீண்டும் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இரு நிலநடுக்கங்கள் தொடர்ந்து ஏற்பட்டதால் மியான்மரில் பல நகரங்கள் பெரும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளன.
இந்த நிலையில், மியான்மருக்கு மனிதாபிமான அடிப்படையில் நிவாரண உதவிகளை வழங்க குவாட் நாடுகளான இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகள் சேர்ந்து 20 மில்லியன் டாலர் கொடுக்க முன்வந்துள்ளன.
மியான்மர் நிலநடுக்கத்தில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்த நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே, நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 3,000-ஐ தாண்டியதாக மியான்மர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு உதவ இந்தியா சார்பில் என்டிஆர்எஃப் வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, இந்தியா சார்பில் மியான்மர் நாட்டின் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சுமார் 100 டன் அளவிலான நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:வெற்றி நடையில் தமிழகம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்