இந்திய தமிழர்களின் கோரிக்கையை இலங்கை பூர்த்தி செய்யும் என நம்புகிறேன்: பிரதமர் மோடி
கொழும்பு: இந்தியாவில் உள்ள தமிழக மக்களின் கோரிக்கையை இலங்கை பூர்த்தி செய்யும் என நம்புகிறேன் என்று கொழும்பில் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மீனவர்களின் விவகாரத்தை மனிதாபிமானத்தோடு அணுக வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர் மோடி, மீனவர்களின் வாழ்வாதாரம் குறித்தும் இலங்கை அதிபருடன் பேசினேன் என்று தெரிவித்துள்ளார்.
இலங்கை சென்றுள்ள பிரதமர் மோடி, இலங்கை அதிபர் அநுர குமார திசநாயகவுடன் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்று, அதன் நிறைவாக பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
செய்தியாளர்கள் சந்திப்பின்போது பிரதமர் மோடி கூறுகையில், இலங்கைக்கு இந்தியா இக்கட்டான காலக்கட்டங்களில் உதவியிருக்கிறது. இலங்கையில் தீவிரவாத தாக்குதல், கொரோனா காலகட்டங்களில் என இலங்கைக்கு இந்தியா உதவியிருக்கிறது. அது மட்டுமல்ல, பொருளாதரா நெருக்கடியில் இலங்கை தவித்தபோது இந்தியா துணை நின்றதை இங்கே நினைவுகூர்கிறேன்.
இலங்கை அதிபராக அநுர குமார பதவியேற்ற பின் முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்குத்தான் வருகை தந்தார். இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக 10,000 வீடுகளை இந்தியா கட்டிக்கொடுத்துள்ளது. இந்தியா - இலங்கை இடையே வரலாற்று ரீதியாக பிணைப்பும் உள்ளது.
தற்போது இலங்கையில் உள்ள 3 கோயில்களை சீரமைக்க இந்தியா உதவும் என்று உறுதியளிக்கிறேன் என்று கூறினார்.
மேலும், இந்நிகழ்வின்போது, இலங்கையின் உயரிய விருதான மித்ர விபூஷணா விருதினை இலங்கையின் அதிபர் அநுர குமார திசநாயக, பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கௌரவித்தார்.