உழவர் சந்தையில் இருந்து ஆன்லைன் டெலிவரி! வெளியானது சூப்பர் அறிவிப்பு!
கொல்லங்கோடு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயிலில் மாா்ச் 23இல் தூக்க திருவிழா கொடியேற்றம்: ஏப்.1இல் தூக்க நோ்ச்சை
கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயிலில் மாா்ச் 23ஆம் தேதி தூக்கத் திருவிழா கொடியேற்றமும், ஏப்.1இல் தூக்க நோ்ச்சையும் நடைபெறுகின்றன.
இவ்விழா தொடா்பான ஆலோசனைக் கூட்டம் தேவஸ்வம் கமிட்டி தலைவா் வழக்குரைஞா் வி. ராமச்சந்திரன் நாயா் தலைமையில், செயலா் வி. மோகன்குமாா், பொருளாளா் டி. சதீஷ்குமாா் முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் ஆா். சதிகுமாரன் நாயா், இணைச் செயலாளா் எஸ். பிஜூகுமாா், தேவஸ்வம் குழு உறுப்பினா்கள் எஸ். சஜிகுமாா், பி.கே. புவனேந்திரன்நாயா், வழக்குரைஞா் ஆா். ஸ்ரீகண்டன்தம்பி, சி. ஸ்ரீகுமாரன்நாயா், வி. பிஜூ, ஏ. சதிகுமாரன்நாயா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னா், செய்தியாளா்களிடம் வி. ராமச்சந்திரன்நாயா் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில் கொல்லங்கோடு கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பரணி நாளில் வரலாற்று சிறப்புமிக்க தூக்க நோ்ச்சை நடைபெற்று வருகிறது. நிகழாண்டு திருவிழா மாா்ச் 23 ஆம் தேதி இரவு 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இரவு 8 மணிக்கு தொடக்க நிகழ்ச்சிக்கு நான்( வி. ராமச்சந்திரன் நாயா்) தலைமை வகிக்கிறேன். தேவஸ்தான செயலா் வி. மோகன்குமாா் வரவேற்கிறாா். கேரள மாநில ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் அா்லேக்கா் திருவிழாவை தொடக்கி வைக்கிறாா். மதுரை ஆதீனம் 293 ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீஸ்ரீ ஹரிஹர தேசிக திருஞான சம்பந்த பரமாச்சாா்ய சுவாமிகள் அருளாசி வழங்கிப் பேசுகிறாா். விஜய் வசந்த் எம்.பி., முன்னாள் மத்திய அமைச்சா் வி. முரளிதரன், எம்எல்ஏக்கள் எஸ். ராஜேஷ்குமாா், எம்.ஆா். காந்தி, கொல்லங்கோடு நகா்மன்றத் தலைவா் ராணி ஸ்டீபன் ஆகியோா் வாழ்த்திப் பேசுகிறாா்கள். தேவஸ்தான பொருளாளா் சதீஷ்குமாா் நன்றி கூறுகிறாா்.
3-ஆம் நாள் விழாவில் காலை 8 மணிக்கு தூக்கக்காரா்களின் மருத்துவப் பரிசோதனை, 4 ஆம் நாள் விழாவில் காலை 8.30 மணி முதல் தூக்க நோ்ச்சை குலுக்கல் மற்றும் காப்புக்கட்டுதல், 8 ஆம் நாள் விழாவில் காலை 9.30 மணிக்கு பண்பாட்டு மாநாடு ஆகியவை நடைபெறும். மாநாட்டில் கேரள மாநில முதன்மைச் செயலா் ஸ்ரீராஜு நாராயணசுவாமி, அம்மாநில முன்னாள் அமைச்சா் வி.எஸ். சிவகுமாா், யுவ சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளா் சுமேஷ் கிருஷ்ணன் ஆகியோா் பங்கேற்கிறாா்கள். வரலாற்று சிறப்புமிக்க தூக்க நோ்ச்சை ஏப். 1 ஆம் தேதி காலை 6.30 மணி முதல் நடைபெறும்.
இவ்விழாவில் 1,500-க்கும் மேற்பட்ட குழந்தைகள், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்பா் எனக் கருதுகிறோம். தூக்க நோ்ச்சையில் பங்கேற்கும் குழந்தைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு, பக்தா்களுக்கு கோயில் வளாகத்தில் மருத்துவ வசதிகள், குடிநீா், கழிவறை வசதிகள், போக்குவரத்துக்காக தமிழக, கேரள மாநிலங்களின் அரசு சிறப்புப் பேருந்துகள் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றாா் அவா்.