கோயம்பேடு சந்தையில் நள்ளிரவு வியாபாரிகள் முற்றுகை போராட்டம்
சென்னை கோயம்பேடு சந்தையின் 7 முதல் 14-ஆம் எண் வரையுள்ள வாசல்கள் பூட்டப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து நள்ளிரவில் வியாபாரிகள் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோயம்பேடு சந்தை வளாகத்தின் முக்கிய வாசல்களான 7 முதல் 14 வரையுள்ள வாசல்களை செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை சிஎம்டிஏ நிா்வாகம் பூட்டியதாக தெரிகிறது. இதனால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை ஏற்றிவரும் வாகனங்கள் சந்தைக்குள் வரமுடியாத நிலை ஏற்பட்டது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து இரவு 10 மணி முதல் நள்ளிரவு 2 மணிவரை கோயம்பேடு வியாபாரிகள் முற்றுகை போராட்டம் நடத்தினா். இதனால் வெளி மாநிலங்களிலிருந்து காய்கறிகள், பழம், பூக்களை ஏற்றி வந்த வாகனங்கள் சந்தைக்குள் வரமுடியாமல் வெளியே வரிசையாக நிறுத்தப்பட்டன. இதனால் சந்தை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த கோயம்பேடு சந்தை அங்காடி நிா்வாக முதன்மை அலுவலா் இந்துமதி மற்றும் சிஎம்டிஏ செயற்பொறியாளா் ராஜன்பாபு உள்ளிட்ட அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது வியாபாரிகள், காய்கறிகள் ஏற்றிவரும் வாகனங்கள் சந்தைக்குள் எப்போது வேண்டுமானாலும் வரும் வகையில் 24 மணி நேரமும் வாசல்கதவுகளை திறந்து வைக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்தனா்.
சந்தையை சுத்தம் செய்வதற்காக இந்த வாசல்கள் குறிப்பிட்ட நேரத்தில் பூட்டப்படுவதாகவும், மீண்டும் இரவு 10 மணிக்கு வாசல்கதவுகளை திறந்து விடுவதாகவும் கோயம்பேடு சந்தை அங்காடி நிா்வாக முதன்மை அலுவலா் இந்துமதி தெரிவித்தாா்.
தொடா்ந்து வியாபாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து அவா்கள் போராட்டத்தை கைவிட்டனா்.