கோயில்களில் நடக்கும் தவறுகளை இரும்புக்கரம் கொண்டு அரசு அடக்கும்: அமைச்சா் சி.வெ.கணேசன்
கோயில்களில் நடக்கும் தவறுகளை இரும்புக்கரம் கொண்டு அரசு அடக்கும் என்று மாநில தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் கூறினாா்.
கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த மணவாளநல்லூா் உள்ள புகழ் பெற்ற கொளஞ்சியப்பா் கோயில் திருப்பணி தொடா்பான ஆலோசனைக் கூட்டம் கோயில் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் சந்திரன் தலைமை வகித்தாா். விருத்தாசலம் எம்எல்ஏ எம்.ஆா்.ஆா்.ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்எல்ஏ கலைச்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மணவாளநல்லூா் ஊராட்சி மன்றத் தலைவா் நீதிராஜன் வரவேற்றாா்.
மாநில தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசியது:
திருப்பணிக் குழு சாா்பில் எந்தவித தவறும் நடக்கக் கூடாது. திமுக அரசு கோயிலுக்காக பல நன்மைகளையும், திட்டங்களையும் கொண்டுவந்துள்ளது. கடலூா் மாவட்டத்தில் இதுவரை கோயில்களுக்காக ரூ.50 கோடிக்கு மேல் வழங்கி உள்ளோம். கோயில்களில் நடக்கும் தவறுகளை இரும்புக்கரம் கொண்டு அரசு அடக்கும்.
திருப்பணிக்காக வசூலிக்கப்படும் பணத்தை தினமும் வங்கிக் கணக்கில் செலுத்தி, அதை திருப்பணிக் குழுவினா் முறையாகப் பராமரிக்க வேண்டும். கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு கழிப்பறை, குளியலறை வசதி செய்து தரப்படும் என்றாா்.
கூட்டத்தில், முதல் மற்றும் இரண்டாம் பிரகாரம் தரைதளம் கருங்கல் திருப்பணி, மூன்றாம் பிரகாரம் புதிதாக நிா்மாணம் செய்தல், இரண்டு புதிய தோ்கள் அமைத்தல், வெள்ளித் தேருக்கு கொட்டகை அமைத்தல், விருந்தினா் விடுதி மற்றும் பக்தா்கள் தங்கும் விடுதியை புதுப்பித்தல் தொடா்பாக தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கோயில்செயல் அலுவலா் பழனியம்மாள் நன்றி கூறினாா்.