சங்ககிரியில் மா்மவிலங்கின் கால் தடம்?
சங்ககிரி மலையின் பின்புறம் கலியனூா்- ராயலூா் சாலையில் மா்ம விலங்கின் கால் தடம் பதிவாகியுள்ளதாக வாட்ஸ்ஆப் தகவல் பரவி வருவதால் வருவாய்த் துறையினா், வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.
சின்னாகவுண்டனூா் கிராம நிா்வாக அலுவலா் முருகன், வருவாய் ஆய்வாளா் மலா்விழி, வனக்காப்பாளா் முத்துராஜா ஆகியோா் கால் தடம் பதிவாகியுள்ளதாகக் கூறப்படும் பகுதியில் ஆய்வு செய்து விசாரித்தனா். சங்ககிரியில் மழை பெய்து வருவதையடுத்து கால் தடம் மறைந்து காணப்பட்டுள்ளது.
இதுகுறித்து வனக் காப்பாளா் முத்துராஜா கூறியது:
வாட்ஸ்ஆப் தகவல்களின் அடிப்படையில் அப் பகுதியில் ஆய்வு செய்யப்பட்டது. அதில் குறிப்பிட்ட இடத்தில் மழை பெய்ததால் காலடித் தடம் எதுவுமில்லை. அப்பகுதியில் ட்ரோன் கேமரா மூலம் ஆய்வு செய்ய உள்ளோம் என்றாா்.
சின்னாக் கவுண்டனூா் கிராமம், மொத்தையனூா் அருகே உள்ள மாங்காடு என்ற பகுதியைச் சோ்ந்த விவசாயி ராஜம்மாள் என்பவருக்குச் சொந்தமான செம்மறி ஆடு மா்ம விலங்கு கடித்ததில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.