சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட 50 ஏக்கர் அளவிலான போதைச் செடிகள் அழிப்பு!
மணிப்பூரில் சட்டவிரோதமாக சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் வளர்க்கப்பட்ட போதைச் செடிகளை பாதுகாப்புப் படையினர் அழித்துள்ளதாக அம்மாநில முதல்வர் பிரண் சிங் தெரிவித்துள்ளார்.
மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தின் காவல் துறை, 6 வது மணிப்பூர் ரைபில்ஸ், இந்திய ராணுவப் படை மற்றும் வனத்துறையினர் இணைந்து அம்மாவட்டத்திலுள்ள முள்ளம் குக்கி எனும் கிராமத்தில் நடவடிக்கை மேற்கொண்டனர்.
அப்போது, சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் வளர்க்கப்பட்ட பாப்பி எனும் போதைச் செடிகள் அழிக்கப்பட்டது. மேலும், அது வளர்க்கப்பட்ட வயலில் இருந்த 4 குடிசைகளும் தீயில் கொளுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: மனைவியைத் துன்புறுத்தியவர் திட்டமிட்டு கொலை! விசாரணையில் திருப்பம்!
இதனைத் தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் அந்த போதைச் செடிகளை வளர்த்த குற்றாவாளிகளைத் தேடி வருகின்றனர்.
முன்னதாக, கடந்த 2024 டிசம்பரில் உக்ரூல் மாவட்டத்தில் சுமார் 70 ஏக்கர் அளவிலான பாப்பி செடிகளை பாதுகாப்புத் துறையினர் அழித்தனர். இந்நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் அம்மாநிலத்தின் 12 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் சுமார் 19,135.6 ஏக்கர் பரப்பளவிலான போதைச் செடிகள் அழிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.