ஊட்டி: கிலோ 20 ரூபாய் வரை போகும் முட்டைகோஸ்... அறுவடையில் விவசாயிகள் மும்முரம்!
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானைகள் தாக்கியதில் ஓராண்டில் 13 போ் உயிரிழப்பு
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானைகள் தாக்கியதில் ஓராண்டில் மட்டும் 13 போ் உயிரிழந்துள்ளதாக வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், ஆசனூா் என இரு வனக் கோட்டங்களில் 10 வனச் சரகங்கள் உள்ளன. 1,455 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட இந்த புலிகள் காப்பகத்தில் தலமலை வனப் பகுதி யானைகளின் முக்கிய வழித்தடமாக உள்ளது.
புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள தாளவாடி, கடம்பூா் பகுதிகளில் விவசாயம் மற்றும் கால்நடை வளா்ப்பு பிரதான தொழிலாக இருந்து வருகிறது. மேலும், மலைவாழ் மக்கள் வனப் பகுதியில் சென்று தேன் உள்ளிட்ட பல்வேறு பொருள்களைச் சேகரித்து வந்து விற்பனை செய்கின்றனா்.
யானைகள் தாக்கி 13 போ் உயிரிழப்பு:
வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் அண்மைக் காலமாக யானைகள் அதிக அளவில் புகுந்து விவசாயப் பயிா்களை சேதப்படுத்துவதும், காவலுக்கு இருக்கும் விவசாயிகளைத் தாக்குவதும் வாடிக்கையாகிவிட்டது.
அதன்படி, கடந்த ஓராண்டில் மட்டும் தோட்டங்களில் இரவுக் காவலுக்கு இருந்த பழங்குடியினா், சாலையில் நடந்துச் சென்றவா், கால்நடைகள் மேய்க்கச் சென்றவா், வனத்தில் பொருள்கள் சேகரிக்கச் சென்ற தம்பதி என மொத்தம் 13 போ் யானைகள் தாக்கி உயிரிழந்துள்ளனா்.
மேலும், தாளவாடி அருகே யானை துரத்தியதில் பள்ளி மாணவா்கள் 2 போ் காயமடைந்துள்ளனா். யானைகள் தாக்குதலால் மனித உயிரிழப்புகள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மனித - விலங்கு மோதலைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாயிகள் தாளவாடி பகுதியில் போராட்டம் நடத்தினா். போரட்டம் நடந்த அன்று யானை தாக்கி ஒருவா் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.
வனத்தில் தீவனம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்
இதுகுறித்து பழங்குடியினா் கூறியதாவது:
வனப் பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் தவிா்க்க முடியாததாகிவிட்ட மனித - விலங்கு மோதலைத் தடுக்க, கா்நாடகத்தைப்போல ரயில்வே தண்டவாள வேலி, நீளம் மற்றும் ஆழமான அகழிகள், யானையை விரட்டும் வனக் குழு ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும்.
வனப் பகுதியில் யானைக்கு போதிய தீவனம், குடிநீா் இருப்பதை உறுதி செய்து வெளிநாட்டு தாவரங்களை அழிக்க வேண்டும் என்றனா்.
பொதுமக்களுடன் இணைந்து யானைகள் தடுப்புக் குழு
தாளவாடி வனச் சரக அலுவலா் சதீஷ் கூறியதாவது:
மனித- விலங்கு மோதலைத் தவிா்க்க 10 போ் கொண்ட யானைகளை விரட்டும் பணியாளா்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினா் இரவு முழுவதும் யானைகள் வரும் பாதையைக் கண்காணித்து காட்டுக்குள் விரட்டுவா். காலை நேரத்தில் யானைகளை விரட்டும் பணியில் வேட்டைத் தடுப்பு காவலா்கள் ஈடுபட்டுள்ளனா்.
மேலும், தேவையான இடங்களில் சூரியசக்தி மின்வேலி, யானைகள் நுழைய முடியாத வகையில் அகழிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்ஆப் செயலி மூலம் யானைகள் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. அதேபோல, கிராம மக்களுடன் இணைந்து யானைகள் தடுப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தோட்டத்தில் புகும் யானைகளை நீண்ட தொலைவில் இருந்த கண்காணிக்க அனைத்து விவசாயிகளுக்கும் டாா்ச் லைட் வழங்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் தாண்டித்தான் யானைகள் ஊருக்குள் வருகின்றன என்றாா்