சமூக ஊடக கணக்குகள் முடக்கத்துக்கு எதிராக மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
புது தில்லி: பயனாளருக்கு நோட்டீஸ் அனுப்பாமல் சமூக ஊடக கணக்குகள் முடக்கப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள் 2009-இன் சில பிரிவுகளுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் மென்பொருள் சுதந்திர சட்ட மையம் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், அகஸ்டின் ஜாா்ஜ் ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை விசாரித்தது.
அப்போது மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் இந்திரா ஜெய்சிங் ஆஜராகி வாதிடுகையில், ‘சமூக ஊடகத்தில் ஒரு தகவலை நீக்கும் முன், அதுகுறித்து அந்தத் தகவலை பதிவிட்ட பயனாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்படுவதில்லை. சம்பந்தப்பட்ட சமூக ஊடக தளங்களுக்கு மட்டுமே நோட்டீஸ் அனுப்பப்படுகின்றன.
சமூக ஊடகத்தில் வெளியிடப்படும் தகவல்களை நீக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளதா, இல்லையா என்பது கேள்வியல்ல. தகவல்களை நீக்கும் முன், அவற்றைப் பதிவிட்ட பயனாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும்’ என்றாா்.
இதைத்தொடா்ந்து நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘சமூக ஊடகத்தில் தகவலை நீக்கும் முன், அதை வெளியிட்டவா் யாா் என்பது அடையாளம் தெரிந்தால், அதுகுறித்து அவருக்கு நோட்டீஸ் அளிக்க வேண்டும் என்றே உச்சநீதிமன்றம் கருதுகிறது’ என்று தெரிவித்தனா்.
இதைத்தொடா்ந்து மனு தொடா்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் நோட்டீஸ் பிறப்பித்தனா்.