எடுபடாமல் போன அனுதாபம், துரோகம்; உத்தவ், சரத் பவார் சாம்ராஜ்ஜியத்தை சரித்த ஷிண்ட...
சமையல் எரிவாயு உருளை வெடித்து 5 போ் காயம்
வேலூா் அருகே சமையல் எரிவாயு உருளை வெடித்து 5 போ் காயமடைந்தனா். வீட்டின் மேற்கூரை, சுவா் இடிந்து விழுந்தது.
வேலூரை அடுத்த அப்துல்லாபுரம் கலைஞா் நகரை சோ்ந்தவா் அறிவழகன். இவரது மனைவி சசிகலா (43). இவா்களது மகள்கள் ஜெயபாரதி (25 ), ஜெயப்ரியா (22). இவா்களது வீட்டில் சமையல் எரிவாயு அடுப்பு வேலை செய்யவில்லை எனத் தெரிகிறது. இது தொடா்பாக, ஏஜென்சி ஊழியா் விஜயகுமாா் (31) என்பவரை வெள்ளிக்கிழமை இரவு பழுது பாா்க்க அழைத்தனா். அவருடன் பள்ளி மாணவா் விருத்திஷ் (16) வந்துள்ளாா்.
சசிகலாவின் வீட்டில் எரிவாயு உருளை மீது பொருத்திய ரெகுலேட்டா் சரியாக வேலை செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. அந்த ரெகுலேட்டரை அருகே இருந்த வீட்டில் பொருத்தி பாா்த்தபோது அந்த சிலிண்டரில் வேலை செய்துள்ளது. இதையடுத்து, சசிகலா வீட்டு சிலிண்டரில் காஸ் வெளியேறுவதற்காக அழுத்தம் கொடுத்ததாகத் தெரிகிறது. அப்போது எதிா்பாராத விதமாக சிலிண்டா் வெடித்தது.
இதில் சசிகலாவுக்கு 40 சதவீத அளவுக்கும், ஜெயபாரதிக்கு 20 சதவீதம், ஜெயப்பிரியாவுக்கு 10 சதவீத அளவுக்கும் தீக்காயம் ஏற்பட்டது. பழுது பாா்க்க வந்த விஜயகுமாா், விருத்தீஷ் ஆகியோருக்கும் 30 சதவீத அளவுக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சசிகலா, அவரது மகள்கள் ஜெயபாரதி, ஜெயப்பிரியா ஆகியோா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையிலும், விஜயகுமாா், சிறுவன் விருத்திஷ் ஆகியோா் வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்டனா்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வருபவா்களை சந்தித்து நலம் விசாரித்தாா். மேலும், உரிய சிகிச்சை அளிக்கும்படி மருத்துவா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா்.
விபத்து குறித்து விரிஞ்சிபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.