நெப்போலியன் குடும்பத்தின் 900 கோடி மதிப்பிலான நகைகள் திருட்டு! - சினிமாவை மிஞ்சி...
சம்பூர்ண ராமாயணம் பார்த்து சங்கடப்பட்ட அனுபவம்! - அந்தக் காலச் சினிமா
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
எங்களூரிலிருந்து ஐந்தாறு கிலோமீட்டர் தூரமுள்ள சங்கந்தியில் டூரிங் டாக்கீஸ் இயங்கிக் கொண்டிருந்த நேரம். இந்த சினிமா அரங்குகள் நிரந்தரமானவை அல்ல.
கொஞ்ச காலத்திற்கு இருக்கும். அப்புறம் சில காலம் இயங்காது. பின்னர் சிலகாலம் படம் போடுவார்கள். இயங்குகின்ற காலங்களில் ஒரு நீண்ட கூண்டு வண்டியில் ரிக்கார்ட் போட்ட படி, சுற்று வட்டாரங்களில் கையலக நோட்டீஸை வினியோகிப்பார்கள். என்ன படம்?யார் நடித்தது போன்ற விபரங்கள் அதில் சுருக்கமாக இருக்கும்.
எந்தத் தேதியிலிருந்து திரையிடப்படுகிறது என்ற விபரம் சற்றே பெரிய எழுத்துக்களில்,கவனத்தை ஈர்க்கும் விதமாகப் பிரிண்ட் செய்யப்பட்டிருக்கும்.
அந்த வண்டி ஊருக்குள் வந்து விட்டாலே,வண்டியின் பின்னால் சிறுவர்கள் கூட்டம் அலைமோதும்.
நான்கைந்து பேராகப் படம் பார்க்கச் செல்லும் இளைஞர்கள், மரைக்காக் கோரையாற்றங்கரை வழி சென்று, ரயில் பாலத்தைக் கடந்து குறுக்கு வழியில் திரையரங்கை அடைந்து விடுவார்கள். அப்படிப் போனால் சில கிலோமீட்டர்கள் தூரம் குறைந்து விடும். வழியில் குறுக்கிடும் சுடுகாடுகளுக்குப் பயப்படக்கூடாது.
ஒரு தடவை எனது அண்ணன்,அவருடைய நண்பர்கள் இரண்டு மூன்றுபேர் மற்றும்
எனது அக்கா,பக்கத்து வீட்டு அக்கா என்று ஐந்தாறு பேர் படம் பார்க்கச் சென்றிருக்கிறார்கள்.போகும் போது சாலை வழியாகப் பஸ்ஸில் சென்று விட்டு, வரும்போது குறுக்கு வழியாக நடந்து வந்திருக்கிறார்கள். ஆற்றங்கரைச் சுடுகாட்டில் பிணம் எரிய, அண்ணனின் நண்பர் வீராசாமியோ மற்றவர்கள் பயப்படக்கூடாது என்பதற்காக “அது ஒண்ணுமில்லை! யாரோ முட்செடிகளைக் கொளுத்தியிருக்கிறார்கள்!” என்ற கூறியபடியே, ஓர் எரியும் சிறுகட்டையைப் பிடுங்கி சுருட்டைப் பற்ற வைத்தாராம்!எனது அக்கா பலமுறை இதனைச் சொல்லியிருக்கிறார்கள்.
ஒரு முறை அங்கு சம்பூர்ண ராமாயணம் படம் திரையிட்டிருந்தார்கள். அப்பொழுதெல்லாம் இதிகாச,புராண படங்கள் நன்றாகவே ஓடச் செய்யும். பெரும்பாலான வீட்டுப் பெண்டிர்கள் அந்தப் படங்களைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டுவார்கள். என் தாயாரும் அந்தப் படத்தைப் பார்க்க விருப்பப்பட்டதால்,எனது சித்தப்பா தனது பார வண்டியைத் தயார்செய்தார்.

அப்பொழுதெல்லாம் கூண்டு வண்டி,ரேக்ளா வண்டி,பார வண்டி,என்று மூவகை வண்டிகள் கிராமங்களில் உண்டு. பார வண்டிகளை,நெல்மூட்டைகள்,வைக்கோல், மணல்,செங்கற்கள்,குப்பைகள் ஆகியவற்றை ஏற்றும் விதமாக,இரு பக்கங்கள் மட்டும் அடைத்து,மேலே அடைக்காமல் விட்டிருப்பார்கள்.
பூட்டும் மாட்டின் இழுக்கும் திறனைப் பொறுத்து வெயிட்டை ஏற்றுவார்கள். கூண்டு வண்டி மழை,வெயிலைத் தாங்கும் கூண்டுகளுடன்,அமரவும்,இரு புறமும் சாயவும் மெத்தைகள் வைக்கப்பட்டு, கொஞ்சம் க்ராண்டாக இருக்கும். அவை இல்லாத வண்டிகளும் உண்டு.ரேக்ளா என்பது சிறிதாக,இரண்டு பேர் மட்டும் அமரும் விதமாக ஓபனாக இருக்கும். சில உயிரினங்கள் அழிந்து வருவதைப்போல, இந்த வண்டிகளும் குறைந்து வருகின்றன.
பாரவண்டியில், பலகையின் மீது வைக்கோலைப் போட்டு அதன் மீது ஜமக்காளத்தை விரித்து விடுவார்கள்.அதுதான் பயணியரின் மெத்தை. சித்தப்பாவும் அது போலவே ரெடி செய்து,தயாராகி விட்டார்.அம்மா,சின்னம்மா,பக்கத்து வீட்டு அண்ணி, அத்தை மற்றும் சிறுவர்கள் என்று ஏழெட்டு டிக்கட் தேறி விட்டது. இரவு உணவை முடித்துக் கொண்டு வண்டியைப் பூட்டியாயிற்று!

இரவு இரண்டாவது ஷோதான் அந்தக் காலத்தில் பெரும்பாலான கிராமத்தார்களின் தேர்வு. அதுதான் ஏற்றதாகவும் இருந்தது. சினிமாவுக்காக எந்த வேலையும் தடைப்படாது. இப்படிப் படம் பார்க்கப் போகையில்,நிலாக் காலம் என்றால் இன்பம் சற்று கூடுதலாகவே இருக்கும். நீர்க்காலத்தில், நீர் இருக்கும் இடமெங்கும் நிலா தன் முகம் பார்க்க,அதனைப் பார்க்கும் நமக்கெல்லாந்தான் எவ்வளவு ஆனந்தம்.
அப்பொழுது எங்கள் கிராமத்தை எட்டவில்லை மின்சாரம்.கரண்ட் வருவதற்கு முன்பு முழு நிலாதான் ராணி!
குன்னலூர், பாண்டி, இடையூர் சுற்றி சங்கந்தி டூரிங் டாக்கீஸ் வந்தாயிற்று.
அரங்கத்திற்கு எதிரான பெரும் திறந்தவெளியின் ஓர் ஓரமாக வண்டியைப் போட்டு விட்டு,மாடுகள் இரண்டையும் மூக்கணையில் கட்டி, வைக்கோலைப் போட்டு விட்டு,படம் பார்க்கப் போனோம்!
சிறுவர்களெல்லோருக்கும் தரை டிக்கட்.25 பைசா என்று நினைக்கிறேன். திரைக்கு அருகில் புழுதியைக் கொட்டி, பரப்பி விட்டிருப்பார்கள். பீச்சில் அமர்ந்து சினிமா பார்ப்பது போலிருக்கும். சிறு பிரச்னை என்னவென்றால், வெற்றிலை, பாக்கு போடுவோர், மணலை விலக்கி எச்சிலைத் துப்பி,மேலே மணலைப் பரப்பி விடுவர். எனவே, அதிலும் இடம் பார்த்து உட்கார வேண்டும். அதற்குப் பின்னர் பெஞ்ச்,சேர் என்று பிரித்து வைத்திருப்பார்கள்.

இரவு இரண்டாவது ஷோதான் அந்தக் காலத்தில் பெரும்பாலான கிராமத்தார்களின் தேர்வு.அதுதான் ஏற்றதாகவும் இருந்தது. சினிமாவுக்காக எந்த வேலையும் தடைப்படாது. இப்படிப் படம் பார்க்கப் போகையில்,நிலாக் காலம் என்றால் இன்பம் சற்று கூடுதலாகவே இருக்கும். நீர்க்காலத்தில்,நீர் இருக்கும் இடமெங்கும் நிலா தன் முகம் பார்க்க, அதனைப் பார்க்கும் நமக்கெல்லாந்தான் எவ்வளவு ஆனந்தம்.
அப்பொழுது எங்கள் கிராமத்தை எட்டவில்லை மின்சாரம். கரண்ட் வருவதற்கு முன்பு முழு நிலாதான் ராணி!
குன்னலூர், பாண்டி, இடையூர் சுற்றி சங்கந்தி டூரிங் டாக்கீஸ் வந்தாயிற்று.
அரங்கத்திற்கு எதிரான பெரும் திறந்தவெளியின் ஓர் ஓரமாக வண்டியைப் போட்டு விட்டு,மாடுகள் இரண்டையும் மூக்கணையில் கட்டி, வைக்கோலைப் போட்டு விட்டு,படம் பார்க்கப் போனோம்!
சிறுவர்களெல்லோருக்கும் தரை டிக்கட். 25 பைசா என்று நினைக்கிறேன்.திரைக்கு அருகில் புழுதியைக் கொட்டி, பரப்பி விட்டிருப்பார்கள். பீச்சில் அமர்ந்து சினிமா பார்ப்பது போலிருக்கும்.
சிறு பிரச்னை என்னவென்றால்,வெற்றிலை,பாக்கு போடுவோர், மணலை விலக்கி எச்சிலைத் துப்பி,மேலே மணலைப் பரப்பி விடுவர். எனவே, அதிலும் இடம் பார்த்து உட்கார வேண்டும். அதற்குப் பின்னர் பெஞ்ச்,சேர் என்று பிரித்து வைத்திருப்பார்கள்.
உள்ளே ஒரு டீக்கடை இருக்கும்.அரங்கினுள்ளே முறுக்கு,கடலை மிட்டாய்,
பாப்கார்ன் விற்பார்கள்.இன்டர்வெலின்போது டீக்கடை களை கட்டும்.
அந்தக் காலப் படங்கள் எல்லாமே 3 மணி நேரத்திற்கு மேல் ஓடக்கூடியவை.
ஒரு வழியாக சினிமா முடிந்து,சிறுவர்கள் சிலர் தூக்கக் கலக்கத்தில் இருக்க,
ஏற்கெனவே தூங்கி விட்டவர்களை எழுப்பி,உடன் வந்த பெரியவர்கள் அழைத்துச் செல்வர்.
வெளியே வந்து,வண்டியை அடைந்தோம்.கட்டிய ஜோடி மாட்டில், ஒன்று மட்டும் படுத்திருந்தது.மற்றதைக் காணோம்.சித்தப்பா அங்கே, இங்கே என்று ஓடித் தேடியும் கண்ணில்படவில்லை. எல்லோரும் தூக்கக் கலக்கத்தில்,எப்படி வீடு போய்ச் சேர்வது என்ற பயங்கலந்த எதிர்பார்ப்பில்,தவிப்புடன் நின்றிருந்தோம்.
கண்ணுக் கெட்டிய தூரம் வரை சென்று பார்த்த சித்தப்பா,அவசரமாக வந்து மற்றொரு மாட்டை அவிழ்த்தார்.எல்லோரையும் அமைதியாக இருக்கும் படிக் கூறி விட்டு, மாட்டுடன் சென்றார்.சிறிது நேரத்திலேயே வேறு ஒரு ஜோடி மாட்டுடன் வந்து, வண்டியைப்பூட்டி,அனைவரையும் வீடு கொண்டு வந்து சேர்த்தார்.
கொஞ்ச நேரம் திகைப்பில் ஆழ்த்தி விட்டுச் சென்ற மாடு,சித்தப்பா எதிர்பார்த்தது போலவே எங்களுக்கு முன்பே வீடு வந்து சேர்ந்திருந்தது.சித்தப்பா எப்போதும் ‘பிளான் பி’ வைத்திருப்பார் போலும்.
வைக்கோலை ஏற்றிக் கொண்டு, 40,50 கிலோ மீட்டருக்கு அப்பாலுள்ள ஊர்களுக்கெல்லாம் அவர் செல்வதுண்டு.போகும் போதுதான் சாலையைப் பார்த்து
ஓட்டிச் செல்வார்களாம்.பாரத்தை இறக்கிய பிறகு,மாடுகளைப் பூட்டி விட்டு,அவர்கள்
வண்டியிலேயே தூங்கி விடுவார்களாம்.அந்த மாடுகள் சரியான சாலைகளில்,வருகின்ற
வாகனங்களுக்கு வழி விட்டு,மிகச் சரியாக வீடுகளுக்குக் கொண்டு வந்து சேர்த்து விடுமாம்.
அடுத்த நாள் நன்றாகத் தூங்கி எழுந்த பிறகு,”எப்படிச் சித்தப்பா திடீரென்று வேறு
ஜோடி மாடு கிடைத்தது என்றும்,காணாமல் போன மாட்டைப் பற்றி நீங்கள் கவலையே படவில்லையே!” என்றும் கேட்டபோது சித்தப்பா அமைதியாகச் சொன்னார்.
“அது நிச்சயமாக வீட்டுக்குத் தான் வந்திருக்குமென்ற நம்பிக்கை எனக்குண்டு.ஏன்னா அதனோட சுபாவம் அது மாதிரி!நல்ல வேளையா என்னோட வைக்கோல் கட்டிக்கிட்டு
வர்றவரு வீடு பக்கத்தில இருந்திச்சு.அவரு வீட்ல நம்ம ஒரு மாட்டைக் கட்டிட்டு அவரோட ஜோடி மாட்டைப் பிடிச்சிக்கிட்டு வந்து வண்டியில பூட்டிட்டேன்!” என்றார்
நாங்கள் சினிமா பார்க்கப்போக,சித்தப்பாதான் சங்கடத்தை அனுபவித்தார்.
அடுத்த நாள் காலையிலேயே ரெண்டு மாட்டையும் ஓட்டிக் கொண்டு போய் நண்பர் வீட்டில் கட்டி விட்டு,இரவில் விட்டு வந்த ஒற்றை மாட்டைப் பிடித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார்.
இதிகாசச் சினிமா எங்கள் குடும்பத்துக்கு மறக்க முடியாத சினிமாவாக அமைந்து விட்டது.
-பெருமழை விஜய்,
கூடுவாஞ்சேரி
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.






















