சான்டா வேடமிட்ட உணவு டெலிவரி ஊழியர்; வற்புறுத்தி ஆடையை கழற்றச் செய்த இந்து அமைப்பினர்- என்ன நடந்தது?
மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூரில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு சான்டா கிளாஸ் ஆடையை அணிந்திருந்தார். அவரை 'இந்து ஜாக்ரன் மஞ்ச்' எனும் குழு தடுத்து நிறுத்தி, அவரிடம் விசாரித்தது. அது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், உணவு டெலிவரி செய்யும் நபரிடன் சான்டா கிளாஸ் ஆடையைக் கழற்றக் கூறிய 'இந்து ஜாக்ரன் மஞ்ச்' மாவட்டத் தலைவர் சுமித் ஹர்டியா, ``சான்டா கிளாஸ் போல் ஆடை அணிந்து உணவு ஆர்டரை வழங்குகிறீர்களா?... தீபாவளி அன்று ராமர் வேடமிட்டு மக்கள் வீடுகளுக்குச் செல்வதுண்டா?" எனக் கேட்டார்.
அதற்கு அந்த உணவு டெலிவரி செய்யும் நபர், ``இல்லை... நிறுவனம் அணியக் கூறியதால் அணிந்தேன்" என்றார். அதைத் தொடர்ந்து பேசிய `இந்து ஜாக்ரன் மஞ்ச்' மாவட்டத் தலைவர் சுமித் ஹர்டியா, ``இந்துக்களாகிய நாம் குழந்தைகளுக்கு என்ன செய்தி கொடுக்கிறோம். சாண்டா கிளாஸ் வேடமிட்டால் என்ன செய்தி குழந்தைகளுக்கு சென்று சேரும் என்பது தெரிந்துதான் செய்கிறீர்களா? நல்ல செய்தியை மக்களுக்குச் சொல்ல வேண்டும் என விரும்பினால் பகத் சிங், சந்திரசேகர் ஆசாத் போன்றோரின் உடைகளை அணியுங்கள்.
பெரும்பான்மையான உணவுகள் இந்துக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்தியா ஒரு இந்து ராஷ்டிரா (நாடு). இது போன்ற சோதனைகள் பெரும்பாலும் மத மாற்றத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. முகவர்கள் இத்தகைய ஆடைகளை அணிய வைப்பதன் பின்னணியில் அவர்களின் நோக்கம் என்ன? " எனக் கேள்வி எழுப்பினார்.