Bigg Boss 8 Grand Finale: ``நான் வெளியேறக் காரணம் இதுதான்... " - பவித்ரா
சாலை விபத்தில் மனு பாக்கரின் குடும்பத்தார் இருவர் பலி!
ஒலிம்பிக் வீராங்கனை மனு பாக்கரின் தாய்வழிப் பாட்டியும் மாமாவும் சென்ற பைக் மீது கார் மோதிய விபத்தில் இருவரும் பலியாகினர்.
ஹரியாணாவில் ஒலிம்பிக் வீராங்கனை மனு பாக்கரின் தாய்வழி பாட்டி சாவித்ரி தேவியும், மாமா யுத்வீர் சிங்கும் ஞாயிற்றுக்கிழமை, சர்க்கி தாத்ரியில் உள்ள மகேந்திரகர் புறவழிச்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது, தவறான பாதையில் வந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து யுத்வீர் சிங் வாகனத்தின் மீது மோதியது. கார் மோதியதில், யுத்வீர் சிங்கும் சாவித்ரி தேவியும் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இதற்கிடையே, விபத்தை ஏற்படுத்திய காரின் ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடி விட்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இதையும் படிக்க:2025-இல் முதலாவது மனதின் குரல் நிகழ்ச்சி: பிரதமர் சொன்ன விஷயம்!
இதனையடுத்து, உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டு, உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பியோடிய ஓட்டுநரைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டிருப்பதாக உதவி துணை ஆய்வாளர் சுரேஷ் குமார் கூறினார்.
கடந்தாண்டு நடைபெற்ற பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்ற மனு பாக்கருக்கு வெள்ளிக்கிழமைதான் குடியரசுத் தலைவர் மாளிகையில் கேல் ரத்னா விருது வழங்கி, சிறப்பிக்கப்பட்டது. விருது பெற்ற ஆரவாரம் முடிவதற்குள்ளாகவே மனு பாக்கரின் குடும்பத்தார் இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக சமூக ஊடகங்களில் பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.