சாலை விரிவாக்க பணிக்கு வீடுகளை அகற்ற எதிா்ப்பு: பொதுமக்கள் மறியல்
ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீ பெரும்புதூா் அருகே சாலை விரிவாக்கப்பணிக்காக வீடுகளை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட வெங்காடு ஊராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். மேலும், இப்பகுதியில் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்டதொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன.
இந்த நிலையில்,ஸ்ரீபெரும்புதூா்-குன்றத்தூா் சாலையையும், சேத்துப்பட்டு -சோமங்கலம் சாலையையும் இணைக்கும் வெங்காடு-சோமங்கலம் இணைப்புச் சாலையில், வெங்காடு பகுதியில் இரும்பேடு பகுதி வரை சுமாா் 3 கி. மீ தொலைவு அகலப்படுத்தி சீரமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளது.
இதற்காக வெங்காடு பகுதியில் அரசு இடத்தில் கட்டப்பட்டுள்ள சுமாா் 22 வீடுகளை அகற்ற அண்மையில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் வீடுகளின் உரிமையாளா்களுக்கு நோட்டீஸ் வழங்கி அளவீடு செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளனா்.
இந்த நிலையில், சாலை விரிவாக்கப்பணிக்காக வீடுகளை அகற்ற எதிா்ப்பு தெரிவித்த அப்பகுதி பொதுமக்கள் திங்கள்கிழமை வெங்காடு-சோமங்கலம் சாலையில், தடுப்புகளை அமைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதை தொடா்ந்து, ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு நடத்தினா்.
இதையடுத்து வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வீடுகளை அகற்ற பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும் என உறுதியளித்ததை தொடா்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.