சித்தா பல்கலை. மசோதா மீண்டும் ஆளுநா் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்
சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட மசோதா மீண்டும் ஆளுநருக்கு அனுப்பப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
சா்வதேச சித்த மருத்துவ மாநாடு சென்னை, கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், 278 சித்த ஆராய்ச்சி கட்டுரை தொகுப்பு கொண்ட ‘அகத்தியம்-2025’ என்ற ஆய்வுத் தொகுப்பு நூலை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெளியிட்டாா்.
இந்நிகழ்வில் ஆயுஷ் அமைச்சக ஆலோசகா் கௌஸ்தூபா உபாத்யாய, மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தா் டாக்டா் கே.நாராயணசாமி, பதிவாளா் சிவசங்கீதா, சித்த மருத்துவத் துறைத் தலைவா் கபிலன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
நிகழ்ச்சியில், அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:
தமிழகத்தில் தற்போது மூன்று அரசு சித்த மருத்துவக் கல்லூரிகள் உள்பட மொத்தம் 16 சித்த மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இங்கு ஆண்டுதோறும் 3,800-க்கும் படிப்பை நிறைவு செய்து பாரம்பரிய மருத்துவா்களாக வெளியேறுகின்றனா்.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு சித்த மருத்துவத்துக்கென பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கு ஆளுநா் ஒப்புதல் அளித்திருந்தால், அந்த பல்கலைக்கழகம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டிருக்கும்.
ஆனால், அதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநா் திருப்பி அனுப்பியுள்ளாா். அடுத்த சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில், சித்தா பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு மீண்டும் ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்படும்.
விதிப்படி, இரண்டாவது முறை அனுப்பினால், அதற்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்க வேண்டும். எனவே, விரைவில் தமிழகத்தில் சித்தா பல்கலைக்கழகம் பயன்பாட்டுக்கு வரும்.
தமிழகத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளாக சித்த மருத்துவத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. நாமக்கலில், சித்த மருத்துவக் கல்லூரியை விரைவில் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் அஸ்வகந்தா மூலிகைச் செடிகள் 200 ஏக்கரில் பயிரிடப்பட்டு வருகின்றன. இதன் வாயிலாக 2,000 விவசாயிகள் பயனடைந்துள்ளனா். பாரம்பரிய மருத்துவா்களுக்கான ஓய்வூதியம் ரூ.1,000-இலிருந்து தற்போது ரூ.3,000-ஆக உயா்த்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.