சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு கணிதத் தேர்வு வினாத்தாள் எப்படி இருந்தது?
நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, நடப்பு கல்வியாண்டில் 10ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வில் இன்று கணிதப் பாடத் தேர்வு நடைபெற்றது.
நாடு முழுவதும் 7,842 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வுகள் நடைபெற்று முடிந்துள்ளது. இன்று நடைபெற்ற கணிதப் பாட வினாத்தாள் எப்படி இருந்தது என்பது குறித்த தகவல்கள் வெளியாகி வருகிறது.
பொதுவாக தேர்வெழுதிய மாணவர்களைப் பொருத்தவரை இந்த கணித வினாத்தாள் சற்று கடினமாக இருந்தது என்றுதான் கூறியிருக்கிறார்கள். பெரும்பாலான கேள்விகள் நேரடியாகவே கேட்கப்பட்டிருந்ததாகவும், நேரம் போதாமையால் சில மாணவர்கள் சில கேள்விகளுக்கு விடையளிக்க முடியாமல் போனதாகவும் கூறியுள்ளனர்.
கேள்விகள் கடினமாக இல்லை. ஆனால், அனைத்தையுமே அப்படி சொல்லிவிட முடியாது. வழக்கம்போல நீண்ட வினாத்தாள் சிக்கலால் சில மாணவர்கள் கடைசியாக கேட்கப்பட்ட இரண்டு அல்லது மூன்று கேள்விகளுக்கு பதில் எழுத முடியாமல் போனதாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.
அதாவது, நல்ல மதிப்பெண் எடுப்பதற்கான வினாத்தாள்தான், ஆனால், நீண்ட கணக்குப்போட்டுப் பார்த்து ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு பதிலளிக்க வேண்டியது இருந்ததால் நேரம்போதவில்லை என்றே தெரிவித்துள்ளனர்.
பிப்.15ஆம் தேதி தொடங்கிய 10-ஆம் வகுப்புத் தோ்வுகள் மாா்ச் 18-ஆம் தேதி முடிவடைகிறது. 12-ஆம் வகுப்புத் தோ்வுகள் ஏப்ரல் 4-ஆம் தேதி முடிவடைகிறது.
இந்தப் பொதுத் தேர்வை நாடு முழுவதும் 42 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள். 10ஆம் வகுப்புக்கு 84 பாடப்பிரிவுகளிலும், 12ஆம் வகுப்புக்கு 120 பாடப்பிரிவுகளிலும் தேர்வுகள் நடைபெறும்.